அதிருப்தி; வனத்தோட்டக்கழக செயலால் மக்கள்...யூகலிப்டஸ் வளர்க்க காடுகள் அழிப்பு

தினமலர்  தினமலர்
அதிருப்தி; வனத்தோட்டக்கழக செயலால் மக்கள்...யூகலிப்டஸ் வளர்க்க காடுகள் அழிப்பு

இயற்கை காடுகளை அழித்து யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கும்நடவடிக்கையில் திருக்கோவிலுார் வனத் தோட்டக் கழகம் ஈடுபட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியுடன் கவலையடையச் செய்துள்ளது.

திருக்கோவிலுார் அடுத்த டி.அத்திப்பாக்கம் கிராமத்தையொட்டி பறந்து விரிந்த இயற்கை காடுகள் திருவண்ணாமலை மாவட்டத்தையும், விழுப்புரம் மாவட்டத்தையும் பிரிக்கும் வகையில் உள்ளது. இந்த காடுகளை 25 ஆண்டுகளுக்கு முன்பு வனத் தோட்டக் கழகம் காட்டை அழித்து யூகலிப்டஸ் மரங்களை பயிர் செய்யத் துவங்கியது.

இதன் காரணமாக இங்கிருந்த மான், காட்டுப்பன்றி, முயல், நரி என பல்வேறு விலங்கினங்களுக்கான வாழ்விடம் அற்றுப் போனது.இருப்பினும் 50 ஏக்கர் பரப்பளவில் இயற்கைக் காடுகளை அழிக்க முடியாமல் வனத்தோட்டக் கழகம் அப்படியே விட்டு வைத்திருந்தது. இதன் காரணமாக வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் செழித்து வளர்ந்து அடர்ந்த வனமாக வனவிலங்குகளுக்கு புகலிடமாக இருந்து கொண்டிருக்கிறது.ஆனால், வனத் தோட்டக் கழகம், சில நாட்களாக இங்குள்ள மரங்களை வெட்டி, புதர்களை அழித்து, வனத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேட்டால், இது வனத் தோட்டக் கழகத்தின் நடவடிக்கை, இதில் நீங்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது. மீறி கேள்வி கேட்டால் உங்கள் மீது வழக்கு தொடருவோம் என மிரட்டல் விடுப்பதாக புலம்புகின்றனர்.வனத்திற்குள் 5க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே வன விலங்குகளின் தாகத்தைப் போக்க அரசர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் குளங்களையும், வனத்தோட்டக் கழகம் பாழ்படுத்தியுள்ளது.குளத்திற்கு வரும் நீர் வழிப்பாதையை ஜே.சி.பி., மூலம் அடைத்து விட்டது.

இதனால் மழைநீர் குளத்திற்கு வரமுடியாமல் குளம் வறண்டு வனவிலங்குகள் தண்ணீரின்றி தவிக்கும் நிலையை வனத்தோட்டம் கழகம் உருவாக்கியுள்ளது.வனத்தை அழித்து, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்களை வளர்த்து, இயற்கைக்கு எதிராக செயற்கை வனத்தை உருவாக்கி பல வழியிலும் இயற்கையை பாழ்படுத்தி பணத்தைப் பார்க்கும் அரசும், வனத் தோட்டக் கழக அதிகாரிகளும் இச்செயல் வனவிலங்குகளை பாதிப்பதுடன் சுற்றுச்சூழல் மோசமடையும் என்பதை உணரவில்லை.மான், மயில் என இப்பகுதி வன உயிரினங்களுக்கு ஒரே புகலிடமாக இருக்கும் இந்த சிறிய வனத்தையும் அழித்து விட்டால், விலங்குகள் தங்க இடமின்றி தவிக்கும் சூழலில் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வனத்தைப் பாதுகாக்க வேண்டிய வனத் தோட்டக் கழகம், பாலைவனமாக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மூலக்கதை