அமைகிறது கலெக்டர் அலுவலகத்தில் அடர்வன தோட்டம்...2000 மரக்கன்றுகள் நடுவதற்கு பணிகள் துரிதம்-

தினமலர்  தினமலர்
அமைகிறது கலெக்டர் அலுவலகத்தில் அடர்வன தோட்டம்...2000 மரக்கன்றுகள் நடுவதற்கு பணிகள் துரிதம்

கடலுார்- கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முட்புதர்கள் அகற்றியதுடன், 2000 மரக்கன்றுகள் நட்டு, அடர்வன தோட்டம் அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

கடலுார் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை வளாகத்தில், 27 ஏக்கர் பரப்பளவில் கலெக்டர் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு, ரூ. 26 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் விஸ்தாரமான கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் வைத்து பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், முட்புதர்கள், செடிகள் வளர்ந்து, காடுபோன்று காட்சியளித்தது. விஷ ஜந்துக்கள் புழங்கும் இடமாக மாறியது.

கலெக்டர் முயற்சிஇந்நிலையில், கடந்த ஜூலை மாதம் புதியதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்திர சேகர சகாமுரி, அலுவலக வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் முட்புதர்கள், தேவையற்ற செடி கொடிகள் அகற்றப்பட்டன. அலுவலக வளாகத்தில் உள்ள பார்க்குகளில் வளர்ந்திருந்த செடிகளும் அகற்றி அழகுபடுத்தப்பட்டன.இந்நிலையில், கரூரில் உள்ள தமிழ்நாடு அரசு காகித ஆலை (டி.என்.பி.எல்.,) நிறுவன வளாகத்தில் அடர்வன தோட்டம் துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் சம்பத், நிறுவன வளாகத்தில் 110 வகையிலான, 4,000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.அப்போது, கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலவகை மரங்களை நட்டு, அடர்வன தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வேளாண் துறை உதவியுடன், காகித ஆலை நிறுவன ஆலோசனைப்படி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடர்வன தோட்டம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. நாளை (30ம் தேதி) அமைச்சர்கள் சம்பத், செல்லுார் ராஜூ ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு தோட்டம் அமைக்கும் பணியை துவக்கி வைக்கின்றனர்.

இதற்காக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த முட்புதர்கள் பொக்லைன், புல்டோசர் மூலம் அகற்றி துாய்மையாக்கப்பட்டது. வளாகம் முழுவதும் நடுவதற்கு பல்வேறு வகையான 2000 மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மரங்கள் நடுவதற்கு இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டுதல், பள்ளம் மேடான வளாகத்தை சமன்படுத்துதல், மரக்கன்று நட உள்ள பள்ளத்தில் அடி உரம் போடுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.இந்நிலையில், தோட்டம் அமைக்க நடந்துவரும் பணியை கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, துரிதப்படுத்தினார்.

மூலக்கதை