இந்தியாவில் இங்கிலாந்து தொடர்: கங்குலி நம்பிக்கை | செப்டம்பர் 28, 2020

தினமலர்  தினமலர்
இந்தியாவில் இங்கிலாந்து தொடர்: கங்குலி நம்பிக்கை | செப்டம்பர் 28, 2020

கோல்கட்டா:  ‘‘இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,’’ என, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய மண்ணில் இம்மாதம் இங்கிலாந்து அணி ‘டுவென்டி–20’, ஒருநாள் தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 13வது ஐ.பி.எல்., தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்தப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு 14வது ஐ.பி.எல்.,க்கு முன், இங்கிலாந்து தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), யு.ஏ.இ., கிரிக்கெட் போர்டுகள் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, 2021ல் ஐ.பி.எல்., மற்றும் இங்கிலாந்து தொடர் யு.ஏ.இ., மண்ணில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி கூறியது: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்த முன்னுரிமை அளிக்கப்படும். யு.ஏ.இ., மண்ணில் அபுதாபி, சார்ஜா, துபாய் என, மூன்று மைதானங்கள் இருப்பது சாதகமான விஷயம். இதுபோன்ற வசதி மும்பையிலும் உள்ளது. தவிர, கோல்கட்டாவில் ஈடன் கார்டன் மைதானம் உள்ளது. எனவே வீரர்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது சுலபம். கொரோனா சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதற்கேற்ப இந்திய மண்ணில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தவிர, உள்ளூர் போட்டிகளையும் நடத்த ஆலோசித்து வருகிறோம்.

சென்னை அணி கேப்டன் தோனி, அனுபவம் வாய்ந்தவர். கடந்த ஒன்னரை ஆண்டுகளாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காததால் இவர் பழைய ‘பார்முக்கு’ திரும்ப சிறிது கால அவகாசம் தேவைப்படும். இவர், பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் களமிறங்க வேண்டும்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

மூலக்கதை