சி.பி.ஐ., வசம் 678 வழக்குகள்

தினமலர்  தினமலர்
சி.பி.ஐ., வசம் 678 வழக்குகள்


புதுடில்லி: சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவு, 678 வழக்குகளை விசாரித்து வருவதாக, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆணையம், கடந்த ஆண்டிற்கான அறிக்கையை, சமீபத்திய பார்லிமென்டில் தாக்கல் செய்தது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:சி.பி.ஐ., 678 வழக்குகளை புலனாய்வு செய்து வருகிறது. அவற்றில், 25 வழக்குகள், ஐந்தாண்டுகளுக்கு மேல் விசாரணையில் உள்ளன.
சி.பி.ஐ.,ஒரு வழக்கின் விசாரணையை, ஓராண்டுக்குள் முடித்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.


சில வழக்குகளில், பல்வேறு காரணங்களால் புலனாய்வை முடிக்க தாமதமாகிறது. போதிய அதிகாரிகள் இல்லாதது, அதிக பணிச்சுமை போன்றவையும் தாமதத்திற்கு காரணம். வங்கி மோசடிகள் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களை நிரூபிக்க, ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் தேவைப்படுவதால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது தாமதமாகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 6,226 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில், 182 வழக்குகள், 20 ஆண்டுகளாக உள்ளன.தாமதமான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை