வருமா நல்ல வேளை! தவிக்குது மதுக்கரை மார்க்கெட் சாலை: விபத்தால் பலருக்கு போதாத வேளை!

தினமலர்  தினமலர்
வருமா நல்ல வேளை! தவிக்குது மதுக்கரை மார்க்கெட் சாலை: விபத்தால் பலருக்கு போதாத வேளை!

போத்தனூர்:மழை நீர் தேங்கி, மீண்டும், மீண்டும் மதுக்கரை மார்க்கெட் ரோடு சேதமடைவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். சிறப்பு கவனம் செலுத்தி, இச்சாலையை சீரமைக்க மாநகராட்சி உடனடியாக முன்வர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் ரோட்டில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது.
இதற்காக பல மாதங்களாக ரோட்டில் குழி தோண்டப்பட்டது.பணி முடிந்த பின், மெட்டல் கலவை போடப்பட்டது. ஆனால் குழாயிலிருந்து நீர் வெளியேறியதால், ரோடு சேதமடைந்தது. வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, கடந்த ஜூலையில் குழாய் கசிவை சீரமைக்கும் பணி நடந்தது. தொடர்ந்து, பேபி ஜல்லி கலவை போட்டு, தார் ஊற்றி ரோடு சீரமைக்கப்பட்டது.ஆனால், அடுத்து பெய்த மழை வெள்ளமும், தனியார் மருத்துவமனை எதிர்புறத்திலிருந்து வரும் தண்ணீரும் மீண்டும் அதே இடத்தில் தேங்கியது. இதனால் சாலை மீண்டும் சேதமடைந்துள்ளது.
கடந்த வாரம் இரவு நேரத்தில், பைக்கில் வந்த ஒரு வாலிபர் அவ்விடத்தில் விபத்துக்குள்ளானார். அதிகளவு ரத்தம் வெளியேறி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதற்கு முன், ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த வாலிபர், பஸ்சில் சிக்கி பலியானார். மேலும் பல விபத்துகளில் காயங்களுடன் அதிகம் பேர் தப்பியுள்ளனர்.தொடர் விபத்து பகுதியாக மாறியுள்ள இவ்விடத்தில், இனியும் இப்படி விபத்துக்கள் ஏற்படாதவாறு, சாலையை சீரமைக்க வேண்டும்.
தண்ணீர் வெளியேறுவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இப்பகுதி தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் தினமும், இவ்வழியாகதான் அங்குமிங்கும் சென்று வருகின்றனர். சாலையின் அவலம் குறித்து நன்கு தெரிந்தும், நடவடிக்கைக்கு வலியுறுத்த யாரும் முன்வருவதில்லை. ஏன்... உள்ளாட்சித்துறை அமைச்சரும் அவ்வப்போது, இதே சாலையைதான் பயன்படுத்துகிறார்.
இருந்தபோதும் அதே அவலநிலையில் கிடக்கிறது சாலை.எப்போது வருமோ நல்ல வேளை!ரத்தம் வழிய கதறிய இளைஞர்!கடந்த வாரம் இரவு இவ்விடத்தில், விபத்தில் சிக்கிய வாலிபர் சுமார், 30 நிமிடங்களுக்கும் மேல், ரத்தம் வெளியேறிய நிலையில் காப்பாற்ற யாருமில்லாமல் கிடந்துள்ளார். அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வாலிபரை பார்த்தும் உதவாமல் சென்றுள்ளனர்.அருகே தனியார் மருத்துவமனை இருந்தும், கொரோனா தொற்று பயம் காரணமாக யாரும் வரவில்லை. அதே நேரத்தில், அதே மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் ஒருவரும், தனியார் நிறுவன ஊழியர்கள் சிலரும் மனித நேயத்துடன் செயல்பட்டு, வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூலக்கதை