பனியன் நிறுவனத்துக்கு ஆட்கள்... தேடும் படலம்!

தினமலர்  தினமலர்
பனியன் நிறுவனத்துக்கு ஆட்கள்... தேடும் படலம்!

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் பணிபுரிகின்றனர். கொரோனாவால், ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஊரடங்கு தளர்வுக்குப்பின், மே மாதம் முதல், நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்கின.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலிருந்து, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வர துவங்கிவிட்டன. தீபாவளி நெருங்குவதால், உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்களும், பண்டிகை கால ஆடை தயாரிப்பில் வேகம்காட்டி வருகின்றன. இதனால், தற்போது, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, கட்டிங் மாஸ்டர், ஓவர்லாக், பிளாட் லாக், சிங்கர், கைமடி, செக்கிங் பிரிவுகளில் தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது. தேவையான தொழிலாளரை பணி அமர்த்தும்வகையில், நிறுவனங்கள், ஆட்கள் தேவை விளம்பர பலகைகளை, தொங்கவிட்டுள்ளன.
ஆடை உற்பத்தி துறையினர் கூறியதாவது:கொரோனாவால், கடந்த ஆறு மாதங்களாக ஆடை உற்பத்தி நடைபெறவில்லை. தீபாவளி நெருங்கும் நிலையில், உள்நாட்டு சந்தையில் ஆடை தேவை அதிகரித்துள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், பண்டிகை கால வர்த்தகத்துக்கு தேவையான ஆடை தயாரிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன.
வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் பெரும்பாலானோர், இன்னும் திருப்பூர் திரும்பவில்லை. போதிய தொழிலாளரை பணி அமர்த்தினால் மட்டுமே, பண்டிகை கால ஆடை உற்பத்தியை சிறப்பாக பூர்த்தி செய்யமுடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை