வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்: இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிப்பால் பரபரப்பு; ஏராளமானோர் கைது

தினகரன்  தினகரன்
வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்: இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிப்பால் பரபரப்பு; ஏராளமானோர் கைது

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். டெல்லி இந்தியா கேட் பகுதியில் டிராக்டரை தீயிட்டு எரித்து எதிர்ப்பை தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் உட்பட பல மாநிலங்களில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, மூன்று வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். ஆனாலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இவை சட்டமாக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனால், வேளாண் மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். பஞ்சாப், அரியானா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாய அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் காங்கிரசார் டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் ஏற்றி வரப்பட்ட பழைய டிராக்டர் ஒன்றை ஏற்றி ராஜபாதை சாலையில் போட்டு தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேர  போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். அதற்குள் டிராக்டர் முழுமையாக எரிந்து விட்டது. இது தொடர்பாக, முதற்கட்டமாக பஞ்சாப் இளைஞர் காங்கிரசை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் பரிவர்தன் சவுக்கில் இருந்து ஆளுனர் மாளிகை நோக்கி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு தலைமையில் புறப்பட்ட போராட்டக் குழுவினர் பாதி வழியிலேயே மடக்கி கைது செய்யப்பட்டனர். அதே போல, லக்னோவில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றவர்களும் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ராஜ்பவன் நோக்கி மாநில காங். தலைவர் அமித் சாவ்டா தலைமையில் ஊர்வலம் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர், விவசாயிகள் காந்தி நகரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி ராணா தெரிவித்தார்.இதற்கிடையே, ராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் சார்பில் முதல்வர் அசோக் கெலாட், மாநில காங். தலைவர் கோவிந்த் சிங் ஆகியோர் ஆளுனர் கல்ராஜ் மிஸ்‌ராவை ராஜ்பவனில் சந்தித்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சமர்ப்பித்தனர். பஞ்சாப்பில் விவசாயிகள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியானாவிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பஞ்சாப்பில், விடுதலை போராட்ட தியாகி பகத்சிங்கின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி  செலுத்திய மாநில முதல்வர் அமரீந்தர் சிங், வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த சட்டங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு அழித்து விட்டது. 3 சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்வோம்,’’ என்று கூறினார்.* அமரீந்தர் எச்சரிக்கைபஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பஞ்சாப்பில் எங்கு, எப்போது யாரிடம் துப்பாக்கி, வெடிகுண்டுகளை கொடுக்கலாம் என்று காத்திருக்கிறது. இதுவரை பஞ்சாபில் அமைதி நிலவியது. ஆனால் ஒருவனின் வயிற்றில் அடிக்கும் போது, அவனுக்கு கோபம் வரும் அல்லவா? அவன்தான் ஐஎஸ்ஐ.யின் இலக்காகிறான். பாகிஸ்தானின் உளவு அமைப்பாக செயல்படும் ஐஎஸ்ஐ அமைப்பினர், தற்போது எழுந்துள்ள விவசாயிகளின் கோபத்தையும், போராட்டத்தையும் பயன்படுத்தி, எல்லை மாநிலமான பஞ்சாபில் நிச்சயமாக பிரச்னையை உண்டு பண்ணுவார்கள்,’’ என்றார்.* நாட்டிற்கு தலைகுனிவுடிராக்டர் எரிக்கப்பட்டது தொடர்பாக பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரசின் இன்றைய செயல் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசார் லாரியில் டிராக்டரை ஏற்றி வந்து  இந்தியா கேட் அருகே தீயிட்டு கொளுத்தி, விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதாக, விளம்பரத்துக்காக நாடகமாடி உள்ளனர். விவசாயிகளின் பெயரில் காங்கிரஸ் அரசியல் நடத்துவது தோலுரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது,’’ என்றார்.* வேளாண் சட்டத்துக்கு எதிராக முதல் வழக்குவேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்பி. டி.என் பிரதாபன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வேளாண் சட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. இதுதொடர்பாக ஜனாதிபதி வழங்கிய ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும். முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரக்கூடாது,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேளாண் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.* விவசாயிகளுக்கு மரண தண்டனைகாங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையாகும். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் மரித்து போனதற்கு இதுவொரு சான்றாகும்,’’ என்று கூறி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு கோரிய படத்தை இணைத்துள்ளார்.* முழு அடைப்பால் முடங்கியது கர்நாடகாபெங்களூரு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மற்றும் நில சீர்த்திருத்த சட்டம், ஏபிஎம்சி தனியார் மயம், இலவச மின்சாரம் ரத்து உள்பட பல்வேறு சட்ட திருத்தங்களை கண்டித்து கர்நாடகாவில் 300க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவுடன் நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பெங்களுரு, பெலகாவி, மைசூரு, மண்டியா, ராம்நகரம், குடகு, ஹாசன், சிக்கமகளூரு, ஹாசன், மங்களூரு, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் முக்கிய சாலைகளில் போராட்டம் நடத்தினர். பெரும்பான்மையான மாவட்டங்களில் அரசு பஸ் இயங்கவில்லை. தனியார் பஸ் சேவையும் ரத்து செய்யப்பட்டது. ஓலோ, உபர் உள்ளிட்ட டாக்சி சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. சில ஆட்டோக்கள் மட்டும் ஓடியது. வர்த்தர்கள் தாமாக முன்வந்து கடைகள் அடைத்தனர். இதனால் வர்த்தகம் முழுமையாக நிறுத்தப்பட்டது. பெங்களூரு டவுன்ஹால்  எதிரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர். பெங்களூருவில் முன்னாள் எம்எல்ஏ வாட்டாள் நாகராஜ், கழுதை மீது அமர்ந்து வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார். கர்நாடக ரக்‌ஷணா வேதிகே அமைப்பினர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் மற்றும் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஜெயகர்நாடக அமைப்பை சேர்ந்த பெண்கள், டவுன்ஹால் எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கர்நாடகா மாநிலமே முடங்கியது.

மூலக்கதை