பந்தை பறக்கவிட்ட பால்காரர் பையன்

தினகரன்  தினகரன்
பந்தை பறக்கவிட்ட பால்காரர் பையன்

பஞ்சாப் - ராஜஸ்தான் லீக் போட்டியில், ஐபிஎல் தொடரின் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாகத் துரத்திய சாதனையை ராஜஸ்தான் மீண்டும் நிகழ்த்தியது. அதிலும் ராஜஸ்தான் அணியின் ராகுல் திவாதியா (27 வயது) தனது அதிரடியால் யார் என கேட்க வைத்தார். அவர் சந்தித்த முதல் 19 பந்துகளில் 8 ரன் எடுத்தபோது, விக்கெட்டை தாரைவார்த்து வெளியேறினால் போதும் என்று திட்டித் தீர்க்காத ரசிகர்களோ, விமர்சகர்களோ இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பொறுமையை சோதித்த திவாதியா, ஆட்டமிழந்து வெளியேறும்போது 31 பந்துகளில் 53 ரன் எடுத்திருந்தார். அதாவது எஞ்சிய 12 பந்துகளில் 45 ரன்களை அள்ளினார். அதிலும் காட்ரெல் வீசிய 18வது ஓவரை தவிடுபொடியாக்கிய அவர் அதில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.உள்ளூர் போட்டிகளில் அரியானா அணிக்காக 2013 முதல் விளையாடுகிறார். ஐபிஎல் தொடரில் 2014 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்காக ஏற்கனவே விளையாடிவர், தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். மேலும் 2018ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட சில நிமிடங்களில் பஞ்சாப், டெல்லி அணிகளுக்கு இடையே போட்டா போட்டி. பஞ்சாப் ரூ.2.5 கோடிக்கு கேட்க, டெல்லி ரூ.3 கோடிக்கு கொத்திச் சென்றது. திவாதியாவின் தந்தை கிரிஷன் பால் ஒரு பால்காரர், தாத்தா மல்யுத்த வீரர், சித்தப்பா ஹாக்கி வீரர். அதனால் மல்யுத்த வீரராக்க வேண்டும் என்று தாத்தாவும், ஹாக்கி வீரராக்க வேண்டும் என்று சித்தப்பாவும் தீவிரம் காட்டினாலும், திவாதியாவுக்கு கிரிக்கெட் மீதுதான் ஆர்வம்.

மூலக்கதை