பணப்புழக்கம் ரூ.26 லட்சம் கோடியை எட்டியது; வங்கி ஏடிஎம்களில் பணத்தை மொத்தமாக எடுத்த மக்கள்; ‘டிஜிட்டல் இந்தியா’ பலன் தரவில்லையா? ;பொருளாதாரத்தில் தொடரும் மந்தநிலை

தினகரன்  தினகரன்
பணப்புழக்கம் ரூ.26 லட்சம் கோடியை எட்டியது; வங்கி ஏடிஎம்களில் பணத்தை மொத்தமாக எடுத்த மக்கள்; ‘டிஜிட்டல் இந்தியா’ பலன் தரவில்லையா? ;பொருளாதாரத்தில் தொடரும் மந்தநிலை

புதுடெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்தபோதும், நாட்டில் பணப்புழக்கம் இதுவரை இல்லாத உச்சமாக ரூ.26 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த ஜூலை மாத நிலவரப்படி, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.34 லட்சம் கோடியை ஏடிஎம்களில் இருந்து மக்கள் எடுத்துள்ளனர். கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த 2 வாரங்களுக்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில், இந்த காலக்கட்டத்தில் மக்களிடையே பணப்புழக்கம் ரூ.17,891 கோடி அதிகரித்து, புதிய உச்சமாக ரூ.26,00,933 கோடியை எட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைந்த 2 வாரத்துக்கான அறிக்கையில், பணப்புழக்கம் ரூ.22.55 லட்சம் கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பணப்புழக்கம் ரூ.3.45 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. 2016ம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்தின்போது, இந்திய பொருளாதாரத்தை ரொக்க பரிவர்த்தனை குறைவாக உள்ளதாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. அப்போது மக்களிடையே பணப்புழக்கம் ரூ.17.97 லட்சம் கோடியாக இருந்தது. பின்னர், 2017 ஜனவரியில் பணப்புழக்கம் ரூ.7.8 லட்சம் கோடியாக குறைந்தது. அதேநேரத்தில், கடந்த ஏப்ரலில் ரூ.82.46 லட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை, கடந்த ஜூலை 31ம் தேதிப்படி ரூ.111.18 லட்சம் கோடியாக உயர்ந்தது. மக்களிடையே பணப்புழக்கம் கடந்த பிப்ரவரி 28 மற்றும் ஜூன் 19ம் தேதி இடையே ரூ.3.07 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ஆனால் ஜூன் 19க்கு பிறகு கடந்த செப்டம்பர் 11 வரை ரூ.37,966 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்களில் இருந்து டெபிட் கார்டு மூலம் மக்கள் எடுப்பது கடந்த ஏப்ரலில் ரூ.1,27,660 கோடியாக இருந்தது, ஜூலையில் ரூ.2,34,119 கோடியாக உயர்ந்துள்ளது.ரிசர்வ் வங்கியில் இருந்து வெளியிடப்பட்ட பணத்தில், வங்கிகளில் உள்ள இருப்பை கழித்து விட்டு பணப்புழக்கம் கணக்கிடப்படுகிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் தங்களின் வசிப்பிடத்தில் அருகில் உள்ள கடைகளிலேயே பொருட்களை வாங்கினர். இதனால் ரொக்கப் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. தற்போது விதிகள் தளர்த்தப்படுவதால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் இனி அதிகரிக்கலாம். இருப்பினும், பணப்புழக்கம் அதிகரித்தும் கூட, பொருளாதாரம் பெரிய அளவில் உயரவில்லை என்றனர்.

மூலக்கதை