கொரோனா விவகாரத்தில் நாடுகளை ஒன்றிணைப்பதில், ஐ.நா.,தோல்வி

தினமலர்  தினமலர்
கொரோனா விவகாரத்தில் நாடுகளை ஒன்றிணைப்பதில், ஐ.நா.,தோல்வி

நியூயார்க் :கொரோனா விவகாரத்தில் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைப்பதில், ஐ.நா., தோல்வி அடைந்து விட்டதை அடுத்து, அந்த அமைப்பை உடனடியாக சீர்திருத்த வேண்டும் என, உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன

.ஐ.நா.,வின், 75வது ஆண்டு பொதுச் சபை கூட்டத் தொடரில், முதன் முறையாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பேசி, பதிவு செய்யப்பட்ட, 'வீடியோ' ஒளிபரப்பட்டது.

அதில், பெரும்பாலான உறுப்பு நாடுகளின் தலைவர்கள், 'கொரோனா விவகாரத்தில், பணக்கார நாடுகளின் சுயநலப் போக்கை தடுக்கத் தவறியதால், ஐ.நா., உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைந்து விட்டது' என, குற்றஞ்சாட்டினர்.பிரதமர் மோடி,'ஐ.நா.,வின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து இன்னும் எத்தனை காலம் தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான, இந்தியாவை தள்ளி வைக்கப் போகிறீர்கள்?' என,கேள்வி எழுப்பினார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்களை, ஐ.நா., உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதை விரிவாக்கம் செய்து, இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுளை சேர்க்க, 2005ல் ஐ.நா., முயன்றது. ஆனால், சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பால், இத்திட்டம் கைவிடப்பட்டது.

இது தவிர, ஐ.நா., பாதுகாப்பு சபை விரிவாக்கம் தொடர்பாக, ஆப்ரிக்க நாடுகளுக்கும், இத்தாலி, பாக்., ஆகியவற்றுக்கும் இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இதனால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் நடக்காமல் உள்ளது. உறுப்பு நாடுகளின் ஒற்றுமையின்மை, கொரோனாவால் மேலும் வெட்ட வெளிச்சமாகிஉள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரப்பியது தொடர்பாக, அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டின.

கொரோனா தடுப்பூசியை உறுப்பு நாடுகளுக்கு வினியோகம் செய்வதற்கான, ஐ.நா.,அமைப்பில் சேர, அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவை மறுத்து விட்டன. இந்நிலையில் தான், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரஸ் கடந்த வாரம் பேசும்போது, 'உலக நாடுகளின் ஒற்றுமையை நிரூபிக்க, கொரோனா வைரஸ் வைத்த சோதனையில், ஐ.நா., தோல்வி அடைந்து விட்டது' என, வெளிப்படையாக வேதனை தெரிவித்தார்.

இருந்தபோதிலும், பெரும்பாலான உறுப்பு நாடுகளின் தலைவர்கள், ஐ.நா.,வில் உடனடியாக சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்தில் மட்டும், ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

மூலக்கதை