மராட்டியத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது; முதல்வர் உத்தவ் தாக்கரே தகவல்

தினகரன்  தினகரன்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது; முதல்வர் உத்தவ் தாக்கரே தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 13.21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.69 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மக்கள் பெருமளவு வெளியே வரத் தொடங்கியதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் இதுபோன்ற நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல் மகாராஷ்டிராவிலும் கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அரசின் உத்தரவை மீறி மக்கள் வெளியே செல்கின்றனர். மக்கள் அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை