எல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இராணுவம் தயார் நிலை; மைனஸ் 40 டிகிரியில் செயல்படும் தளவாடங்கள் குவிப்பு!!!

தினகரன்  தினகரன்
எல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இராணுவம் தயார் நிலை; மைனஸ் 40 டிகிரியில் செயல்படும் தளவாடங்கள் குவிப்பு!!!

லடாக்: இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் வகையில் இந்திய இராணுவ தளவாடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு படைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. லடாக்கில் கடல்மட்டத்திலிருந்து 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மைனஸ் 40 டிகிரியில் கடும் குளிர் நிலவுகிறது. அங்கு சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் படைகளை குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடும் பனியிலும் சிறப்பாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இராணுவ தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்தஸ் நதியில் வெள்ளப்பெருக்கை தாண்டி செல்லவும், மற்ற தடைகளை கடக்கவும் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதாவது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடும் குளிரை தாங்கும் குடில்கள், சமையல் செய்வதற்கான வசதி மற்றும் கழிவறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, உடைகள், வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் எப்போதும் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் எல்லையில் அத்துமீறிய சீனாவுக்கு தகுந்த பதிலடி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை