உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் இன்று காலை காலமானார் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவருமான ஜஸ்வந்த் சிங் (82) இன்று காலை உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய அவர், பாஜக கட்சியின்  உருவாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றியவர்.

1996  முதல் 2004 வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணி ஆட்சியில், பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் நிதித்துறை  அமைச்சராக இருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில், பாஜகவில் அவருக்கு சீட் கொடுக்கவில்லை.

அதனால், கட்சியை விட்டு வெளியேறினார்.

அதே ஆண்டில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் கோமா நிலையில் இருந்தார்.

தொடர் கவனிப்பில் இருந்த அவர், இன்று காலை காலமானார். அவரது உடலானது அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா போரின் போது சிறப்பாக செயல்பட்ட ஜஸ்வந்த் சிங்கிற்கு, கடந்த 2001ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘ஜஸ்வந்த் சிங் முதலில் ஒரு ராணுவ வீரராக நாட்டிற்கு பணியாற்றினார்.

பின்னர் அரசியல் வாழ்க்கையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் முக்கியமான இலாகாக்களை கவனித்தார். நிதி, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் போன்ற துறையில் வலுவான அடையாளத்தை வைத்திருந்தார்.

அவரது மறைவால் வருத்தப்படுகிறேன். அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் ஜஸ்வந்த் சிங் தனது தனித்துவமான கண்ணோட்டம் உடையவர்.

பாஜகவை வலுப்படுத்த பெரும் பங்களித்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்’ என்று தெரிவித்துள்ளார்.

மு. க. ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவிற்கு தி. மு. க தலைவர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான  ஜஸ்வந்த் சிங்  மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். தி. மு. க.

சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய துயர்மிகு நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை