கருப்பினத்தவர்களுக்கு டிரம்ப் சலுகை மழை

தினமலர்  தினமலர்
கருப்பினத்தவர்களுக்கு டிரம்ப் சலுகை மழை

அட்லாண்டா:கருப்பினத்தவரின் ஓட்டுக்களை ஈர்க்கும் வகையில், கடன் வசதி உட்பட பல்வேறு சலுகைகளை அளிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. பல்வேறு கருத்துக் கணிப்புகளின்படி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.தேர்தலுக்கு, 40 நாட்களே உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும், அதிபர் டொனால்டு டிரம்ப், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில், 'டிரம்புக்கு கருப்பினத்தோரின் குரல்' என்ற பெயரில், நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில், டிரம்ப் பங்கேற்றார். அப்போது, கருப்பின மக்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு சலுகைகள், அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 'கருப்பின மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். உடனடி கடன் உதவி வழங்கப்படும். 'அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட, ஜூன், 10ம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்' என, பல அறிவிப்புகளை, டிரம்ப் வெளியிட்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களில், கருப்பினத்தைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் அவர் பேசினார். 'சிந்தனையில்லாமல் சிலர் செயல்பட்டதால் ஏற்பட்ட இந்த மரணங்கள், நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், கூட்டமாக சேர்ந்து, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதை ஏற்க முடியாது' என, டிரம்ப் குறிப்பிட்டார்.

ரஷ்யா தலையீடு

அமெரிக்காவின் விர்ஜினியாவில் நடந்த பிரசார கூட்டத்தில், டிரம்ப் பேசியதாவது:சமீபத்தில் கிடைத்த பல புதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி, 2016 அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தெரிய வந்துள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட, ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக, ரஷ்யா செயல்பட்டுள்ளது. இதில் இருந்தே, ஹிலாரிக்கு ஆதரவாகத் தான் ரஷ்யா செயல்பட்டது என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

நான் மீண்டும் அதிபரானதும், சீனாவின் தயவில் இருப்பதை நிறுத்துவேன். 'கொரோனா வைரஸ், நம் நாட்டுக்கும், உலகம் முழுதும் சீனா பரப்பியதை நான் மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்.இவ்வறு, அவர் பேசினார்.நீதிபதி நியமனம்?அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ருத் பாதெர் கின்ஸ்பர்ஸ் மறைவையடுத்து காலியாக உள்ள இடத்துக்கு, மேலமுறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும், ஆமி கோனே பெரெட், 48, நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை