இந்தியர்கள் ஆதரவு பறிபோகும்! ஜனநாயக கட்சிக்கு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
இந்தியர்கள் ஆதரவு பறிபோகும்! ஜனநாயக கட்சிக்கு எச்சரிக்கை

வாஷிங்டன்: ஜனநாயக கட்சிக்குள், அமெரிக்க வாழ் ஹிந்துக்களுக்கு எதிரான போக்கு நிலவி வருவதை, கட்சி தலைமை மவுனமாக வேடிக்கை பார்ப்பதால், ஹிந்துக்களின் ஆதரவு, குடியரசு கட்சியின் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பரில் நடக்கவுள்ளது; இதில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுக்களை குறிவைத்து, குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர், தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் வசிக்கும், 18 லட்சம் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. இதில், புளோரிடா, பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில், இந்தியர்களின் ஓட்டு, முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், 'பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உள்ள நட்புறவு மற்றும் டிரம்பின் இந்திய ஆதரவு நிலை ஆகியவை, அமெரிக்க வாழ் இந்தியர்களை, குடியரசு கட்சி ஆதரவாளர்களாக மாற்றியுள்ளது' என, சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்தது.

இதையடுத்து, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை என்ற அமைப்பு, சமீபத்தில் நடத்திய, புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த, அமெரிக்க வாழ் ஹிந்துக்கள், சமீபமாக, குடியரசு கட்சிக்கு ஆதரவான நிலையை எடுத்து வருகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.ஜனநாயக கட்சியின் முற்போக்கு அணி, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறிவருகிறது.

அமெரிக்க வாழ் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது.ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிந்து தலைவர்களுக்கு எதிராகவும், இந்த அமைப்பு கருத்துக்களை தெரிவிக்கிறது; இதை, ஜனநாயக கட்சி தலைமை, மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், அமெரிக்க வாழ் ஹிந்துக்களின் ஆதரவை, ஜனநாயக கட்சியினர், முழுமையாக இழக்க நேரிடும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை