எதுக்கெடுத்தாலும் லஞ்சம்னா என்னங்க இது!வேறெங்கே...நம்ம மாநகராட்சி வருவாய் பிரிவில்தான்

தினமலர்  தினமலர்
எதுக்கெடுத்தாலும் லஞ்சம்னா என்னங்க இது!வேறெங்கே...நம்ம மாநகராட்சி வருவாய் பிரிவில்தான்

கோவை:கோவை மாநகராட்சி வருவாய் பிரிவினருக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, சொத்து வரி நிர்ணயம் செய்து கொடுக்கப்படும் அவலம் தொடர்கிறது. புகாருக்கு உள்ளாகும் ஊழியர்களை, உடனடியாக இடமாற்றம் செய்வதே இதற்கு தீர்வாக அமையும்.
கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியே பிரதான வருமானம். ஆறு மாதத்துக்கு ஒருமுறை என, ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படும். மாநகராட்சி வருவாய் பிரிவில், 40க்கும் மேற்பட்ட பில் கலெக்டர்கள் உள்ளனர்.சிலர், இரு வார்டுகளும், சிலர், மூன்று வார்டுகளும் கவனிக்கின்றனர். வரி வசூல் தீவிரப்படுத்துவது; காலியிட வரி வசூலிப்பது; அனுமதிக்கு மாறாக கட்டியுள்ள கூடுதல் பரப்புக்கு வரி மற்றும் அபராத கட்டணம் வசூலிப்பது; மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை வசூல்; ஏலம் மற்றும் குத்தகை இனங்கள் வசூல் என, வருவாய் ஈட்டக்கூடிய பணிகளில், பில் கலெக்டர்கள் ஈடுபடுகின்றனர்.
எதுக்கெடுத்தாலும் லஞ்சம்!
இப்பிரிவில், சமீபகாலமாக, சொத்தை எழுதி வாங்கும் அளவுக்கு லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டனர். சொத்து வரி நிர்ணயம் செய்ய, நேரடியாக விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.புரோக்கர் மூலமாக வந்தால் மட்டுமே வேலை நடக்கிறது. காலியிட வரி நிர்ணயிக்க, ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கேட்கின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு வரி நிர்ணயிக்க, ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய, ரூ.10 ஆயிரம் வரை பெறுகின்றனர்.லஞ்சம் கொடுக்காமல் பணிகளை செய்து கொடுக்க, பில் கலெக்டர்களில் பலரும் தயங்குகின்றனர். சில பில் கலெக்டர்கள், டவுன்ஹால் அலுவலகத்தில் பணிபுரியும் உயரதிகாரிகளை சுட்டிக்காட்டி, லஞ்சத் தொகையை அதிகமாக நிர்ணயித்துக் கேட்கின்றனர்.பொதுமக்கள் அதிருப்திபணம் கொடுக்காவிட்டால், விண்ணப்பதாரர்களை மாதக்கணக்கில் அலைய விடுகின்றனர்.
இது, மாநகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்கிற மனநிலையை உருவாக்கி இருக்கிறது.லஞ்சம் கொடுக்காமல் பணிகள் நடக்க வேண்டுமெனில், வரி வசூலர்களை, மண்டலம் விட்டு மண்டலம், வெவ்வேறு வார்டுகளுக்கு இட மாற்றம் செய்ய வேண்டும்.குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை, வேறு மண்டலத்துக்கு இட மாற்றம் செய்து, மீண்டும் அதே பணியிடம் வழங்கக்கூடாது. ஏனெனில், சிறிது நாட்கள் கழித்து, அதே தவறுகளை மீண்டும் செய்வதற்கு துணிந்து விடுவர். அத்தகையவர்களை வேறு பிரிவுக்கு நியமிக்க வேண்டும்.
துாய்மை பணியாளர்களில், பட்டம் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்களில், 10 ஆண்டுகள் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்து, பயிற்சியளித்து வார்டுக்கு ஒரு பில் கலெக்டர் ஒதுக்கினால், வரி வசூலை தீவிரப்படுத்தலாம்.மண்டல பொறுப்பாளர்களான, உதவி வருவாய் அலுவலர்களில் சிலர் மீதும் குற்றச்சாட்டுகள் வருவதால், அவர்களையும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்; அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, மாநகராட்சி அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை எங்கே?
இரு ஆண்டுகளுக்கு முன், சொத்து வரி நிர்ணயித்து புத்தகம் வழங்க, லஞ்சம் வாங்கியபோது, ஒரு உதவி கமிஷனர், ஒரு உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். அன்றைய தினம், மண்டல உதவி வருவாய் அலுவலர், அலுவலகம் வராததால் தப்பினார். தற்போது மாநகராட்சி அலுவலகங்களில், லஞ்சம் வாங்குவது அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை