வேலை ரெடி! கிராமப்புற இளைஞர்களுக்கு 'நிப்ட் - டீ' கல்லூரி அழைப்பு

தினமலர்  தினமலர்
வேலை ரெடி! கிராமப்புற இளைஞர்களுக்கு நிப்ட்  டீ கல்லூரி அழைப்பு

திருப்பூர்:மத்திய அரசு திட்டத்தில், இலவச ஆடை உற்பத்தி பயிற்சி முடித்து, உடனடி வேலை வாய்ப்பு பெற, கிராமப்புற இளைஞர்களுக்கு 'நிப்ட் - டீ' கல்லுாரி அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட் - டீ' கல்லுாரி, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,), கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளித்துவருகிறது. இதற்காக, 'நிப்ட் - டீ' கல்லுாரி வளாகத்தில் 2, மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்று என மொத்தம் மூன்று பயிற்சி மையங்கள் இயங்குகின்றன.இந்த திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களின் தகுதிக்கு ஏற்ப, 5ம் வகுப்புக்கு மேல் படித்தோருக்கு, தையல்; பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்தோருக்கு, மெர்ச்சன்டைசிங், உற்பத்தி மேற்பார்வையாளர்; பேஷன் டிசைனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுவரை, மொத்தம், 700 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவால், கடந்த ஆறு மாதங்களாக பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வால், கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கும் இந்த திட்டத்தை 'நிப்ட் - டீ' கல்லுாரி மீண்டும் செயல்படுத்த துவங்கியுள்ளது. தற்போது இப்பயிற்சியில் இணைவதற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இது குறித்து, 'நிப்ட் - டீ' கல்லுாரி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய தலைவர் செந்தில் கூறியதாவது:கொரோனாவுக்குப்பின், கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கியுள்ளது. தற்போதைய சூழலில், ஏராளமானோர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.மற்ற துறைகளைவிட, ஜவுளித்துறை அதிவேகமாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது; அதனால், இத்துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில், தங்குமிடம், உணவு வசதியுடன் முற்றிலும் இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.படிக்காதோர் மற்றும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பு. முன்று மற்றும் நான்கு மாத பயிற்சி பெறுவதன் மூலம், ஆடை உற்பத்தி நுட்பங்களை எளிதாக கற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை