ஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து

தினமலர்  தினமலர்
ஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை : இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலத்திற்கு, பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஐ.என்.எஸ்., என அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக, 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளரும், 'தினமலர்' நாளிதழின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப இயக்குனருமான, இல.ஆதிமூலம், நேற்று முன்தினம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.


ஆதரவு
அவருக்கு நேற்று, பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோர், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும், த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., தேசிய நிர்வாகி எச்.ராஜா, மேகலாயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் ஆகியோரும் வாழ்த்து கூறினர்.

இந்நிலையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி:

இந்திய பத்திரிகைகள் சங்கத்தில், பல்வேறு பதவிகளை வகித்துள்ள ஆதிமூலம், பெங்களூரில் நடந்த சங்கத்தின், ௮௧வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், அனைவரின் ஆதரவுடன், தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன், இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த, 'தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன், 1995 - 96ல் தேர்வு செய்யப்பட்டார்.

அதையடுத்து, 25ஆண்டுகளுக்கு பின், இப்போது தான் தமிழகத்தைச் சார்ந்த இன்னொருவர், இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது, இன்னொரு சிறப்பாகும்.இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக, 'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி, 'தினத்தந்தி' நாளிதழின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், 'தினகரன்' நாளிதழின் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும், என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக, இந்திய ஊடகங்களும், குறிப்பாக, இந்திய அச்சு ஊடகங்களும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.அவற்றை போக்க, அரசின் உதவியுடன் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இத்ததைய சூழலில், இந்திய பத்திரிகைள் சங்கத்தின் தலைவராக தேர்வாகியுள்ள ஆதிமூலமும், மற்ற நிர்வாகிகளும், இந்திய இதழியல் துறையை, சிறப்பாக வழிநடத்திச் செல்ல வாழ்த்துகிறேன்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

நாடார் சங்கம் பாராட்டுஇந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்ட, 'தினமலர்' ஆதிமூலம் மற்றும் நிர்வாகிகளுக்கு, தமிழ்நாடு நாடார் சங்கம், வாழ்த்து தெரிவித்து உள்ளது.சங்கத் தலைவர் முத்து ரமேஷ் அறிக்கை:இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக, 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த, 'தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தனார், 1995 -- 96ம் ஆண்டு, இச்சங்கத் தலைவராக இருந்தார். அதன்பின், 25 ஆண்டு களுக்கு பின், தலைவராக, தமிழகத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது, தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய செய்தி.'தினத்தந்தி' சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், 'தினமலர்' ஆர்.லட்சுமிபதி, 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உட்பட, 38 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.மூலக்கதை