புதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020

தினமலர்  தினமலர்
புதிய தேர்வுக்குழு தலைவர் நீத்து: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு | செப்டம்பர் 26, 2020

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பெண்கள் அணி தேர்வுக்குழு பதவிக் காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இத்தேர்வுக்குழு, கடைசியாக கடந்த பிப்ரவரி–மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பைக்கு இந்திய வீராங்கனைகளை தேர்வு செய்தது. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில், 3 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான சாலஞ்சர் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடருக்கு முன், புதிய தேர்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும். இதற்காக நிறைய விண்ணப்பங்கள் வந்தன.

இந்நிலையில் நேற்று, புதிய தேர்வுக்குழு தலைவராக, முன்னாள் இந்திய ‘சுழல்’ வீராங்கனை நீத்து டேவிட் 43, நியமிக்கப்பட்டார். இவர், இந்தியாவுக்காக (1995–2008) 10 டெஸ்ட் (41 விக்கெட்), 97 ஒருநாள் (141) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர இவர், டெஸ்ட் அரங்கில் சிறந்த பந்துவீச்சை (8/53, எதிர்: இங்கிலாந்து, 1995) பதிவு செய்த இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

தவிர, இக்குழுவில் முன்னாள் இந்திய வீராங்கனைகளான மிது முகர்ஜீ, ரேனு மார்கிரேட், ஆரத்தி வைத்யா, கல்பனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மூலக்கதை