ராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020

தினமலர்  தினமலர்
ராஜஸ்தான் வெற்றி தொடருமா: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 26, 2020

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, லோகேஷ் ராகுல் வழிநடத்தும் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.

 

சென்னையை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய உற்சாகத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. தனிமைப்படுத்துதல் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காத ஜாஸ் பட்லர் இன்று களமிறங்கலாம். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல துவக்கம் தர வேண்டும். சென்னைக்கு எதிராக அரைசதம் கடந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் மீண்டும் கைகொடுக்கலாம். ‘மிடில்–ஆர்டரில்’ டேவிட் மில்லர், ராபின் உத்தப்பா ரன் சேர்க்க வேண்டும்.

‘வேகத்தில்’ ஜோப்ரா ஆர்ச்சர் ஆறுதல் தருகிறார். ஜெயதேவ் உனத்கட், டாம் கர்ரான் அதிக ரன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். ‘சுழலில்’ ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவாட்டியா நம்பிக்கை தருகின்றனர்.

 

ராகுல் நம்பிக்கை: டில்லிக்கு எதிராக ‘சூப்பர் ஓவரில்’ தோல்வியடைந்த பஞ்சாப் அணி, பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் சதம் கடந்த கேப்டன் லோகேஷ் ராகுல் மீண்டும் சாதிக்கலாம். இவருக்கு, மயங்க் அகர்வால் ஒத்துழைப்பு தந்தால் நல்ல துவக்கம் கிடைக்கும். கருண் நாயர், நிகோலஸ் பூரன், மேக்ஸ்வெல் எழுச்சி பெற வேண்டும்.

‘வேகத்தில்’ முகமது ஷமி, காட்ரெல் நம்பிக்கை தருகின்றனர். பெங்களூருவுக்கு எதிராக ‘சுழலில்’ அசத்திய ரவி பிஷ்னாய், முருகன் அஷ்வின் மீண்டும் ஜொலிக்கலாம்.

 

19 முறை

ஐ.பி.எல்., அரங்கில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் 19 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10, பஞ்சாப் 8 ல் வென்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. இதில் ‘சூப்பர் ஓவரில்’ பஞ்சாப் வென்றது.

மூலக்கதை