13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்

தினகரன்  தினகரன்
13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்

புதுடெல்லி: ‘இலங்கையில் செய்யப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, இலங்கை தமிழர்கள் விரும்பும்படியான அதிகார பகிர்வை வழங்க வேண்டும். இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இது அவசியம்,’ என்று அந்நாட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, 4வது முறையாக மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடி, ராஜபக்சே இடையிலான இருநாட்டு உச்சி மாநாடு நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. ராஜபக்சே பதவியேற்ற பிறகு வெளிநாட்டு தலைவருடன் பேசும் முதல் சந்திப்பு இது.  இந்த மாநாட்டில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இலங்கை தமிழர் விவகாரம் முக்கிய அம்சமாக இடம் பெற்றது. இலங்கையில் சிறுபான்மையினர்களான தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கவுரவம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, அதிகார பகிர்வை வழங்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒன்றுபட்ட இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இது அவசியம் என்றும், 1987ல் இந்தியா-இலங்கை ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 13வது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் ராஜபக்சேவிடம் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதவிர, ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வர்த்தக , முதலீட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். உச்சி மாநாட்டில் பங்கேற்றதற்காக ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா, இலங்கை இடையேயான உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும், அண்டை நாடுகளுக்கே முதலிடம் என்ற தனது அரசின் கொள்கை மற்றும் சாகர் கோட்பாட்டின்படி, இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார். இதே போல், கொரோனா காலத்தில் அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்து பொது நலத்துடன் நடந்து கொண்டதற்காக இந்தியாவிற்கு ராஜபக்சே நன்றி தெரிவித்துக் கொண்டார்.மீனவர் விவகாரம் குறித்து ஆலோசனைமாநாட்டில், மீனவர் பிரச்னை குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இப்பிரச்னையை கையாள்வதற்காக தற்போதைய ஆக்கப்பூர்வமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறை தொடரவும், பலப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறையின் இந்திய பெருங்கடல் பிரிவின் இணை செயலாளர் அமித் நரங் தெரிவித்துள்ளார்.புத்த மத உறவுக்காக 110 கோடி நிதி உதவிஇலங்கையுடன் புத்த மத உறவை வலுப்படுத்த 110 கோடி நிதி உதவி வழங்கப்படும் என இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம், இலங்கையில் இருந்து புத்த யாத்ரீகர்கள் குழு வருவதற்கு இந்தியா வசதி செய்யும். இதற்காக உத்தரப் பிரதேசத்தின் குஷி நகருக்கு முதல் விமானம் இயக்கப்படும். இலங்கையில் புத்த மத கலாச்சார இடங்களை புதுப்பிக்கவும் கட்டமைக்கவும், தொல்லியல் துறை கூட்டு ஒத்துழைப்புக்கும், புத்தமத சின்னங்கள் குறித்த பரஸ்பர ஆய்வுக்கும் இந்த நிதி செலவிடப்படும்.* கடந்த 1987ல் அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும், இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே இருநாட்டு ஒப்பந்தத்தின்படி 13வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.* இதன்படி, சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கிடைப்பதற்கு வழி வகுக்கப்பட்டது.* ஆனால், இந்த சட்ட திருத்தத்தை சிங்களர்கள் எதிர்ப்பதால், இலங்கை அரசு இதை முழுமையாக அமல்படுத்தாமல் உள்ளது. அதனால், இந்தியா இதை அமல்படுத்தும்படி வலியுறுத்தி வருகிறது.

மூலக்கதை