பிரித்வி ஷா அரைசதம் | செப்டம்பர் 25, 2020

தினமலர்  தினமலர்
பிரித்வி ஷா அரைசதம் | செப்டம்பர் 25, 2020

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.

ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் சொதப்பிய லுங்கிடி நீக்கப்பட்டு, சென்னை அணியில் ஹேசல்வுட் சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் தோள்பட்டை காயமடைந்த அஷ்வின், மோகித் சர்மாவுக்குப் பதில் அமித் மிஸ்ரா, அவேஷ்கான் இடம் பெற்றனர்.

பிரித்வி அரைசதம்

டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சாம் கர்ரான், சாவ்லா ஓவரில் பிரித்வி, தலா இரண்டு பவுண்டரி அடித்தார். டில்லி அணி 7.1 ஓவரில் 50 ரன்களை கடந்தது.

ஜடேஜா பந்தை சிக்சருக்கு விரட்டிய பிரித்வி, ஐ.பி.எல்., தொடரில் 5வது அரைசதம் எட்டினார். தன்பந்தில் பவுண்டரி அடித்த தவானை (35), வெளியேற்றி நம்பிக்கை தந்தார் பியுஸ் சாவ்லா. இவரது அடுத்த ஓவரில் பிரித்வியை (64), தோனி ‘ஸ்டம்பிங்’ செய்தார்.

அடுத்து இணைந்த ரிஷாப் பன்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சற்று நிதானமாக ரன்கள் சேர்க்க, ரன் வேகம் குறைந்தது. 11.4 ஓவரில் 100 ரன்களை எட்டிய டில்லி 17.2 வது ஓவரில் தான் 150 ரன்களை கடந்தது. ஸ்ரேயாஸ் 26 ரன்களுக்கு அவுட்டாகினார். 

டில்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பன்ட் (37), ஸ்டாய்னிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் பியுஸ் சாவ்லா 2, சாம் கர்ரான் 1 விக்கெட் சாய்த்தனர்.

ரபாடா மிரட்டல்

மூத்த வீரர்கள் அதிகம் பேர் இருப்பதால் சென்னை அணியை ‘டாடி ஆர்மி’(அப்பா படை) என கேலியாக அழைக்கின்றனர். இதற்கு ஏற்ப சீனியர்களான வாட்சன், முரளி விஜய் மந்தமாக ஆடினர். 3 ஓவரில் 10 ரன் தான் எடுத்தனர். வாட்சன், 14 ரன்னுக்கு அவுட்டானார். முரளி விஜயும் 10 ரன்னுக்கு வெளியேறி வெறுப்பேற்றினார். 

10 பந்துகளில் 5 ரன் மட்டும் எடுத்து திணறிய ருதுராஜ், வீணாக ரன் அவுட்டாகி திரும்பினார். கேதர் ஜாதவ் 26 ரன்கள் எடுத்தார். ரபாடா ‘வேகத்தில்’ டுபிளசி(43), தோனி (15), ஜடேஜா (12) வீழ்ந்தனர். கடைசி 2 ஓவரில் 55 ரன் தேவை என்ற நிலையில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. 

ஆட்டநாயகன் விருதை ரபாடா (3 விக்.,) வென்றார்.

 

எஸ்.பி.பி.,க்காக...

எஸ்.பி.பி.,க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை, டில்லி அணி வீரர்கள் கருப்பு ‘பாண்ட்’ அணிந்து விளையாடினர்.

 

1000

அவேஷ்கான் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன், ஐ.பி.எல்., அரங்கில் சென்னை அணிக்காக 1000 ரன்கள் எடுத்த வீரர் ஆனார். இவர் 35 போட்டியில் 1004 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக 137 போட்டியில் 4 சதம், 19 அரைசதம் உட்பட 3626 ரன்கள் எடுத்துள்ளார்.

* சென்னை அணிக்காக இந்த மைல்கல்லை எட்டிய 8வது வீரர் ஆனார். 

 

1000

நேற்று 23 ரன்கள் எடுத்த போது ‘டுவென்டி–20’ அரங்கில் 1000 ரன்கள் எடுத்தார் டில்லி அணியின் பிரித்வி ஷா. 40 போட்டிகளில் இந்த இலக்கை எட்டினார்.

 

‘டைவ்’ அடித்த தோனி

சென்னை அணிக்காக 19வது ஓவரை வீசினார் சாம் கர்ரான். இதன் கடைசி பந்தை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ், வேகமாக அடித்தார். பந்து விக்கெட் கீப்பரை நோக்கிச் சென்றது. இதை அப்படியே வலது புறமாக அந்தரத்தில் ‘டைவ்’ அடித்த தோனி, ‘கேட்ச்’ செய்து கலக்கினார்.

 

2000

டுபிளசி நேற்று 17 ரன்கள் எடுத்த போது ஐ.பி.எல்., அரங்கில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். மொத்தம் 74 போட்டியில் இவர் 2026 ரன்கள் எடுத்துள்ளார்.

மூலக்கதை