சென்னையில் பிரிந்து கோவையில் இணைந்த எஸ்.பி.பி.,- இளையராஜா!

தினமலர்  தினமலர்
சென்னையில் பிரிந்து கோவையில் இணைந்த எஸ்.பி.பி., இளையராஜா!

இளையராஜாவுக்கு, சென்னையில் நடந்த பிரமாண்டமான பாராட்டு விழாவில் பங்கேற்காத எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கோவையில் அவருடன் இணைந்து, மேடையில்
பாடியதை, ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர்.

கடந்த ஆண்டு முழுதும், இசைஅமைப்பாளர் இளையராஜாவுக்கு, 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், 'இளையராஜா - 75' என்ற பெயரில், சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 2019 பிப்., 2, 3ம் தேதிகளில், பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது.அந்த விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அப்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ரஜினி, கமல், இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பங்கேற்றனர்.


ஆனால், இளையராஜாவின் உயிர்த்தோழரும், அவரது இசையில், பல ஆயிரம் பாடல்களை பாடிய, 'பாடும் நிலா' பாலு பங்கேற்கவில்லை. இதுவே, அந்த மகத்தான பாராட்டு விழாவில் மாபெரும் குறையாக இருந்தது. அப்போது, இருவருக்கும் இடையே, 'ராயல்டி' தொடர்பான பிரச்னையால், பேச்சு இல்லாமல் இருந்தது. இதனால், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதில் பங்கேற்கவில்லை.அதன்பின், சென்னை ஈ.வி.பி., ஸ்டூடியோவில் நடந்த, 'இசை கொண்டாடும் இசை' என்ற நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தனர். ஆனாலும், பொது மக்கள் அதிகளவில் பங்கேற்ற மேடையில், இருவரும் இணையவில்லை என்ற வருத்தம், இசை ரசிகர்களிடம் இருந்தது. அந்த குறை, கோவையில் நிவர்த்தி செய்யப்பட்டது.இரண்டு இசை இமயங்களும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மீண்டும் இணைந்தன. கோவை, 'கொடிசியா' மைதானத்தில், 2019 ஜூன், 9ல் நடந்த 'ராஜாதிராஜா' நிகழ்ச்சியில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்று, ஏராளமான பாடல்களைப் பாடினார். அந்த நிகழ்ச்சியில், இளையராஜாவும், எஸ்.பி.பி.,யும், தங்களது நட்பைக் கொண்டாடி, பல்வேறு நினைவுகளையும் பகிர்ந்தனர்.

இருவரும் இணைந்து உற்சாகமாக வழங்கிய இசை வெள்ளம், 'கொடிசியா' மைதானத்தை நிறைத்தது. இசை ரசிகர்கள் நள்ளிரவு வரையிலும், இசை மழையில் இன்பமாக நனைந்தனர்.இளையராஜா கோவையில் நேரடியாகப் பங்கேற்ற முதல் மேடை நிகழ்ச்சியாக அது அமைந்தது. அதுவே, இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து பங்கேற்ற, இறுதி மேடை நிகழ்ச்சியுமாக அமைந்து விட்டது.

மூலக்கதை