பாடிப் பறந்த கிளி பூலோகம் துறந்தது!

தினமலர்  தினமலர்
பாடிப் பறந்த கிளி பூலோகம் துறந்தது!


சென்னை : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 74, சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

தீவிர சிகிச்சை பிரிவு



நடிகரும், பிரபல பின்னணி பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, ஆகஸ்ட், 5ம் தேதி, கொரோனா தொற்றின் லேசான அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து, சென்னை, சூளைமேட்டில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவருக்கு, ஆக., 14ல், உடல்நிலை மோசமானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு, 'வென்டிலேட்டர் மற்றும் எக்மோ' கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்மாதம், முதல் வாரத்தில் உடல்நலம் தேறி வந்தார். செய்கை வாயிலாக, மகன் மற்றும் மகளுடன் பேசியதாக, தகவல்கள் வெளியாகின. விரைவில் அவர் வீடு திரும்புவார் என, எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம், அவரதுஉடல்நிலை மீண்டும் மோசமானது. 51நாட்கள் தொடர் சிகிச்சை தரப்பட்ட நிலையில், நேற்று மதியம், சிகிச்சை பலனின்றி, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் இரவு, நடிகர் கமல் வந்து பார்த்தார். நேற்று, எஸ்.பி.பி., குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் என, பலரும் நேரில் பார்த்தனர்.



தொற்று இல்லை



நேற்று காலை முதல், பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலகினர் பலரும், எஸ்.பி.பி., அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குவிந்தனர். நேற்று மதியம், 1:04 மணியளவில், எஸ்.பி.பி., உயிர் பிரிந்த தகவலை, நடிகரும், இயக்குனருமான வெங்கட் பிரபு, 'டுவிட்டரில்' உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகமும், அறிக்கை வெளியிட்டது.இதற்கிடையே, கொரோனா தாக்கத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பி.,க்கு, செப்., 4ம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதை, மருத்துவமனை நிர்வாகம், தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை