பண்டிகை காலத்திற்கு முன் புதிய ஊக்கச் சலுகை திட்டம்

தினமலர்  தினமலர்
பண்டிகை காலத்திற்கு முன் புதிய ஊக்கச் சலுகை திட்டம்

புதுடில்லி :வரும் பண்டிகை காலத்திற்கு முன், மத்திய அரசு, புதிய ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க, மத்திய அரசு, 'ஏழைகள் நலத்திட்டம்' மற்றும் 'தற்சார்பு பாரதம்' என்ற இரு ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புதிய ஊக்கச் சலுகை திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, இலவச உணவுப் பொருட்கள் வினியோகம், நேரடி ரொக்க மானியம் ஆகியவற்றுடன், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவில்லை. தேவை அதிகம் இல்லாததால், செலவிடுவதும் குறைந்துள்ளது. விரைவில் பண்டிகை காலம் வரவுள்ளது.

. அப்போது, தேவை அதிகரிக்கும் என்பதால், மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்துடன், 35ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 25 பெரிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. இது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். பண்டிகை காலத்திற்கு முன், புதிய ஊக்கச் சலுகை திட்டம் அறிவிக்கப்படும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.



மூலக்கதை