ஒரு வாரமாக விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
ஒரு வாரமாக விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி

சென்னை: ஒருவாரமாக குறைந்து வந்த தங்கம் நேற்று சவரனுக்கு 200 அதிகரித்தது. தங்கம் விலை திடீரென அதிகரித்து இருப்பது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கம் நிலை இருந்து வந்தது. கடந்த 19ம் தேதி ஒரு சவரன் 39,664, 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 21ம் தேதி 39,320, 22ம் தேதி 38,800, 23ம் தேதி 38,560க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமுக்கு 56 குறைந்து ஒரு கிராம் 4,764க்கும், சவரனுக்கு 448 குறைந்து ஒரு சவரன் 38,112க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,552 அளவுக்கு குறைந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை பவுன் 38 ஆயிரத்துக்குள் வந்தது. இது நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்கம் விலை இன்னும் குறைய தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. காலை நிலவரப்படி கிராமுக்கு 41 அதிகரித்து ஒரு கிராம் 4,805க்கும், சவரனுக்கு 328 அதிகரித்து ஒரு சவரன் 38,440க்கும் விற்கப்பட்டது. மாலை நிலவரப்படி காலையில் விற்பனையான விலையை விட தங்கம் விலை சற்று குறைந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 25 அதிகரித்து ஒரு கிராம் 4,789க்கும், சவரனுக்கு 200 அதிகரித்து ஒரு சவரன் 38,312க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மூலக்கதை