வேளாண் மசோதாக்களால் சிறு, குறு விவசாயிகள் அதிக பலன் அடைவர்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
வேளாண் மசோதாக்களால் சிறு, குறு விவசாயிகள் அதிக பலன் அடைவர்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 85 சதவீதத்தினரான சிறு, குறு விவசாயிகள் அதிக பலன் அடைவார்கள்’’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் நேற்று பாரத் பந்த் நடத்தினர். தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களிலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தீனதயாள் உபாத்யாயின் 104வது பிறந்தநாளையொட்டி, பாஜ தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று பேசினார். அவர் கூறியதாவது:வேளாண் மசோதாவால் விவசாயிகளில் 85 சதவீதத்தினர்களாக உள்ள சிறு, குறு விவசாயிகள் அதிக பயன் அடைவார்கள். இதுவரை உள்ளூர் மண்டிகளில் மட்டுமே விளைபொருட்களை விற்பனை செய்த அவர்கள் முதல் முறையாக தங்கள் விளை பொருட்களுக்கு விலை பேசும் வாய்ப்பு கிடைக்கும். மண்டிகளுக்கு வெளியில் அதிக விலை கிடைத்தால் அங்கு விற்கலாம். அல்லது மண்டிகளில் நல்ல விலை கிடைத்தால் அங்கும் விவசாயிகள் விற்பனை செய்யலாம். இதுவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை பிடித்த கட்சிகள் விவசாயிகள் பெயரை சொல்லி அரசியல் செய்தார்களே தவிர வேறெதையும் அவர்களுக்கு செய்யவில்லை.  பல ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட சிறப்பான சட்டங்கள் இவை. ஆனால் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து, அரசு மீது தாக்குதல் நடத்த விவசாயிகளை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றன.இந்த பொய் பிரசாரத்தில் இருந்து விவசாயிகளை நாம் காப்பாற்ற வேண்டும். வேளாண் சட்டங்கள் குறித்த நன்மையையும், பொய் பிரசாரங்களை பற்றியும் அவர்களிடம் விளக்க வேண்டும். இதன் மூலம் நமது தொண்டர்கள் விவசாயிகளுடன் ஓர் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்யை வீழ்த்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை