உளவு தகவல்களை கொடுப்பதாக கூறி பிரபல வக்கீல் சுட்டுக் கொலை : காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம்

தினகரன்  தினகரன்
உளவு தகவல்களை கொடுப்பதாக கூறி பிரபல வக்கீல் சுட்டுக் கொலை : காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் ஹவால் பகுதியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பாபர் காத்ரி என்பவர் நேற்று மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், அரசுக்கு ஆதரவாக ஏஜென்சி உளவாளிகளுக்கு தகவல்களை கொடுப்பதாக ஷா நசீர் என்பவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். எனவே, ஷா நசீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 21ம் தேதி பாபர் காத்ரி கூறியிருந்தார். மேலும், அவர் வெளியிட்ட கடைசி டுவிட்டில், ‘ஏஜென்சிகளுக்காக நான் பணிபுரிவதாக தவறான பிரசாரத்தை பரப்பிய ஷா நஜீருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இந்த பொய்யான அறிக்கையால், எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தீவிரவாதிகள், பாபர் காத்ரியை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த படுகொலை சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, நேற்று இரவு புட்கம் மாவட்டத்தின் காக் பகுதியில் உள்ள தொகுதி மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர் பூபிந்தர் சிங், அவரது மூதாதையர் கிராமமான தல்வாஷில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை