கவலை: மணிமுக்தா அணையை நம்பியுள்ள விவசாயிகள்...போதிய மழை பெய்தும் நீர் வரத்து இல்லை

தினமலர்  தினமலர்
கவலை: மணிமுக்தா அணையை நம்பியுள்ள விவசாயிகள்...போதிய மழை பெய்தும் நீர் வரத்து இல்லை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் மழை பெய்தும் மணிமுக்தா அணைக்கு நீர் வரத்து இல்லாததால், அணை நீரை நம்பியுள்ளவிவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உட்பட பல்வேறு பயிர்கள் ஆண்டுதோறும் அதிகளவில் பயிரிடப்படுகிறதுஇப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக கோமுகி, மணிமுக்தா அணைகள் மற்றும் இரு ஆறுகளும் அமைந்துள்ளன. பருவ மழைக் காலங்களில் அணையிலிருந்து பாசன கால்வாய்கள் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்கின்றனர்.

கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். இதனை நம்பி 57 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 860 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.கோமுகி அணை மலை அடிவாரத்தில் உள்ளதால், மலையில் அதிகளவு மழை பெய்யும் பட்சத்தில் ஒரு சில நாட்களிலேயே அணை நிரம்பி விடும்.மணிமுக்தா அணை தொடர்ந்து பலத்த மழை பெய்தால் மட்டுமே நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 36 (736 மில்லியன் கன அடி) அடி ஆகும்.இந்த அணையை நம்பி அகரகோட்டாலம், வாணியந்தல், சூளாங்குறிச்சி, பல்லக்கச்சேரி, தண்டலை உட்பட 10க்கும் மேற்பட்ட ஊர்களில் 5,200 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன.இந்த அணைகள் நிரம்பி ஆறுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும்போது, அணைக்கட்டுகளில் தேங்கும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்று நீர் பாசனம் சாகுபடிக்கு வழி வகுக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வராயன்மலையில் பெய்த பலத்த மழையால் கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.அணையின் பாதுகாப்பு கருதி, ெஷட்டர்கள் திறக்கப்பட்டு ஆறு வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டன.

கோமுகி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து சுற்று வட்டார பகுதியில் கிணற்று நீர் பாசனத்திற்கும் வழிவகுத்துள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆனால், மணிமுக்தா அணைக்கு நீர் வரத்து இன்றி அப்பகுதியில் பெய்த மழைநீர் மட்டுமே ெஷட்டர் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது.மழை அதிகளவில் பெய்து மணிமுக்தா அணையும் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அதற்கேற்ப மழையின்றி விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், மணிமுக்தா அணையை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மூலக்கதை