10,700 பேர்: மாவட்டத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றோர்...கொரோனா பாதித்த 33 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்

தினமலர்  தினமலர்
10,700 பேர்: மாவட்டத்தில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றோர்...கொரோனா பாதித்த 33 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 7 மாதங்களில் சிறுநீரகம் பாதித்த 10 ஆயிரத்து 700 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், 33 கர்ப்பிணிகள் உட்பட 8,463 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில், கொரோனா காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த பரிசோதனை மையங்களில் சிறுநீரக நோயாளிகளுக்கு 'டயாலிசிஸ்' செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் இம்மாதத்தில் (செப்டம்பர்) இதுவரை கடலுார் அரசு மருத்துவமனை ரத்த பரிசோதனை மையத்தில், 6,968 பேருக்கும், விருத்தாசலம் அரசு மருத்துவமனை 2,107, பண்ருட்டி அரசு மருத்துவமனை 783, சிதம்பரம் அரசு மருத்தவமனை 832 பேர் உட்பட 10 ஆயிரத்து 700 சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்யப்பட்டுள்ளது.

அதே போல், கடலுார் அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் முதல் இம்மாதம் வரை 4,337 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில், 23 பேர் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிகள். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 2,313 பேருக்கு பிரசவம்; கொரோனா பாதித்தவர்கள் 4 பேர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 2,013 பேருக்கு பிரசவம்; கொரோனா பாதித்தவர்கள் 6 பேர் என, கொரோனா பாதித்த 33 பேர் உட்பட 8,463 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடலுார் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில், நேற்று ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் நலப் பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு கூறியதாவது; கொரோனா காலத்தில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணி செய்கிறோம். தொற்றை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்தி வருகிறோம்.

மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிசனுடன் கூடிய 220 படுக்கை வசதிகள் உள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவில் 75 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் முக கவசனம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றக்கூடாது. கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் இருதய சிகிச்சை மற்றும் நரம்பியல் பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லை. அவர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது கண்காணிப்பாளர் சாய்லீலா உடனிருந்தார்.

மூலக்கதை