இந்தியா, மோடிக்கு எதிராக விஷம் கக்கும் 'டைம்!'

தினமலர்  தினமலர்
இந்தியா, மோடிக்கு எதிராக விஷம் கக்கும் டைம்!

புதுடில்லி : அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள, உலகின் செல்வாக்கு மிகுந்த, 100 பேரில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஆனால், அவரைப் பற்றிய குறிப்பில், விஷத்தை கக்கி, இந்தியாவுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை, இந்த இதழ் மீண்டும் நிரூபித்து உள்ளது.'டைம்' இதழ், உலகெங்கும் மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும், வாசகர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப் படையில், உலகின் செல்வாக்குமிக்க, 100 பேரின் பட்டியலை இந்த இதழ் வெளியிடும்.

70 ஆண்டுகள்




அவ்வாறு இடம்பெற்றுள்ளவர்கள் குறித்த சிறு குறிப்பும் வெளியிடப்படும். அதன்படி, 2020ம் ஆண்டுக்கான பட்டியலை, டைம் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட, ஐந்து இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அரசியல் தலைவர்கள் பிரிவில், பிரதமர் மோடி இடம்பெற்று உள்ளார்.பிரதமரானப் பின், நான்காவது முறையாக மோடியின் பெயர், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதற்கு முன், குஜராத் முதல்வராக இருந்தபோது, 2012ல், அவரது பெயர், இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில், மோடி குறித்த குறிப்பை, டைம் இதழின் ஆசிரியர்களில் ஒருவரான, கார்ல் விக் எழுதியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:ஜனநாயகத்தின் முக்கிய அம்சம், அமைதியாக தேர்தல் நடத்தப்படுவது அல்ல; அது, யார் அதிக ஓட்டுகள் பெற்றார் என்பதை மட்டுமே காட்டுகிறது. வெற்றி பெற்றவருக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம். கடந்த, 70 ஆண்டுக ளுக்கு மேலாக, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது.

அதன், 130 கோடி மக்கள் தொகையில், கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், புத்தம், ஜெயின் என, பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர். அனைவரும் இந்தியாவை மதித்து, நேசித்து நடக்கின்றனர். இதைத் தான், சமூக ஒற்றுமை மற்றும் ஸ்திரதன்மைக்கு உதாரணமாக, தலாய் லாமா பெருமையுடன் கூறுகிறார்.ஆனால் நரேந்திர மோடி, இதில் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டார். இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களில் பெரும்பாலானோர், மக்கள் தொகையில், 80 சதவீதம் உள்ள ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், மோடி மட்டுமே, மற்ற மதத்தினர் பற்றி எனக்கு கவலை இல்லை என கருதுகிறார். மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்போம் என்று வாக்குறுதிகள் கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பா.ஜ., அரசு, முஸ்லிம்களை குறிவைத்து, அவர்களுக்கு எதிராக செயல்

படுகிறது.

மறந்து விட்டது



தற்போதைய கொரோனா வைரஸ் காலத்தையும், எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு வாய்ப்பாக பயன்படுத்துகிறது. உலகின் மிகவும் துடிப்புள்ள ஜனநாயகம், இருட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இந்த இதழ் வெளியிட்ட, 100 பேரில், மோடி குறித்தே இவ்வாறு எதிர்மறையான விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது.ஆனால், இது புதிதல்ல, டைம் இதழ் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக, குறிப்பாக மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடி. இந்திய மக்கள், 130 கோடி பேரின் பிரதிநிதியாக உள்ளார். அவர் குறித்த விமர்சனம் மூலம், இந்திய ஜனநாயகத்தை விமர்சித்து உள்ளது, டைம் இதழ். அமெரிக்காவில் இதுவரை, கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் அதிபராகி உள்ளாரா என்பதை, அந்த இதழ் சுலபமாக மறந்து விட்டது.இந்தப் பட்டியலில், 82 வயதாகும், பில்கிஸ் இடம்பெற்றுள்ளார். சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக, டில்லியின் ஷாஹின் பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட, 500 பேரில் இவரும் ஒருவர்.

கடுங்குளிர்



அவரைப் பற்றிய குறிப்பில், 'முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் மசோதாவை மோடி அரசு நிறைவேற்றிய நாளில் இருந்து, இவர் போராட்டத்தில் ஈடுபட்டார். 'கடும் குளிரையும் மீறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. பொய்யான தகவலின் அடிப்படையில், இந்தப் போராட்டம் நடந்தது. ஆனால், அது தெரியாமல், அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே, மோடிக்கு எதிராக, இந்த வாசகத்தை டைம் இதழ் புகுத்தியுள்ளது.

முக்கிய நோக்கம்



இதற்கு முன், ஒவ்வொரு முறை மோடி, இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும், அவரை விமர்சிக்கும் வகையிலேயே, டைம் இதழ் குறிப்பை வெளியிட்டது. அத்துடன், 2019ல் லோக்சபா தேர்தல் நடந்த நேரத்தில், விஷமதனத்துடன், ஒரு கட்டுரையை, டைம் இதழ் வெளியிட்டது. 'டிவைடர் இன் சீப்' அதாவது, பிரித்தாளும் தலைவர் என்ற தலைப்புடன் கட்டுரை வெளியிட்டது.இதில் இருந்து, இந்தியாவுக்கு எதிராக, குறிப்பாக, மோடிக்கு எதிராக, வன்மத்துடன், இந்த இதழ் கட்டுரை வெளியிட்டு வருவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுஉள்ளது. தற்போது பில்கிஸ் குறித்த குறிப்பின் மூலம், முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியா உள்ளது என்பதை காட்டுவதே, அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஐந்து இந்தியர்கள் யார் யார்?



'டைம்' இதழின், உலகின் மிகுந்த செல்வாக்குள்ள, 100 பேர் பட்டியலில், ஐந்து இந்தியர் இடம்பெற்றுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி: அரசியல் தலைவர்கள் பிரிவில் மோடி இடம்பெற்று உள்ளார். பிரதமரான பின், நான்காவது முறையாகவும், மொத்தமாக, ஐந்தாவது முறையாகவும் இந்த பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.

பில்கிஸ்: டில்லி யின் ஷாஹின் பாக் பகுதியில், கடந்தாண்டு இறுதியில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அதில், பங்கேற்ற, 82 வயதாகும் பில்கிஸ், போராட்டக்காரர்களின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டார்.

பேராசிரியர் ரவீந்திர குப்தா: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் பேராசிரியராக உள்ளார். லண்டனைச் சேர்ந்த, ஆடம் காட்டிலிஜோ, 40, உலகிலேயே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த இரண்டாவது நபராவார். அவருக்கு, சிகிச்சை அளித்தது, ரவீந்திர குப்தா.

சுந்தர் பிச்சை: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, கூகுள் பிச்சையும், இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 'முயன்றால் முடியும் என்பதை இளைய சமூகத்தினருக்கு உணர்த்தியுள்ளார்' என, ஜே.பி. மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஜெமி டிமான் எழுதியுள்ள குறிப்பில், இவரைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

ஆயுஷ்மான் குரானா: பாலிவுட் நடிகரான, ஆயுஷ்மான் குரானா, கலைத் துறையினருக்கான பிரிவில் இடம்பெற்று உள்ளார். இவரை அறிமுகம் செய்து, பிரபல நடிகை தீபிகா படுகோனே, குறிப்பு எழுதி உள்ளார். 'மிகவும் குறைவானவர்களுக்கே, அவர்களது கனவு நனவாகிறது. அதில் இவரும் ஒருவர்' என, அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மூலக்கதை