ஜாகிர் நாயக் மீது பிடி இறுகுகிறது

தினமலர்  தினமலர்
ஜாகிர் நாயக் மீது பிடி இறுகுகிறது

புதுடில்லி;இஸ்லாமிய மத பிரசாரகர், ஜாகிர் நாயகின், 'பீஸ் டிவி' செயலி மற்றும் அவரது, 'யூ டியூப்' சேனலுக்கு தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஜாகிர் நாயக், தன், 'பீஸ் டிவி' மூலம், மத வெறுப்புணர்வை துாண்டும் செயலில் ஈடுபட்டு வந்ததால், இரு ஆண்டுகளுக்கு முன், அந்த, 'டிவி' ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 'பீஸ் ஆப்' என்ற மொபைல் போன் செயலி மூலம், மத வெறுப்புணர்வையும், இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களையும், ஜாகிர் நாயக் மேற்கொண்டு வருவதை, புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.


இந்தியாவில், அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தாய் நாட்டிற்கு எதிராக திருப்பி விடும் நடவடிக்கையில், ஜாகிர் நாயக் ஈடுபட்டு வருவதாக, புலனாய்வு துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.


அதில், ஜாகிர் நாயக் மற்றும் அவரது நிறுவனங்களுக்கு, ஜிகாதி குழுக்களுடன் உள்ள தொடர்பும், இந்தியாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு ஆட்களை நியமிக்க, அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, புலனாய்வு அமைப்பு, 'ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி, யூ டியூப் வீடியோ ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்' என, அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதை ஏற்று, விரைவில் ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி மற்றும் யூ டியூப் வீடியோக்கு தடை விதிக்க, உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை