உரிமை குழு நோட்டீசுக்கு தடை: சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

தினமலர்  தினமலர்
உரிமை குழு நோட்டீசுக்கு தடை: சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

சென்னை : சட்டசபை உரிமை குழு சார்பில் இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் மனுக்களுக்கு பதில் அளிக்கும் படி சபாநாயகர் சட்டசபை செயலர் உரிமை குழு தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டசபைக்குள் எடுத்து சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் 21 பேரிடம் விளக்கம் கோரி சட்டசபை உரிமை குழு 'நோட்டீஸ்' அனுப்பியது.நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' வழக்கை விசாரித்தது.உரிமை குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறுகள் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாது என முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இதையடுத்து செப். 7ல் உரிமை குழு கூடியதன் அடிப்படையில் அன்றே சட்டசபை செயலர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராயினர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

உரிமை குழு சார்பில் விளக்கம் கோரிய நோட்டீசை எதிர்த்த வழக்கில் ஏற்கனவே முதல் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து வர சபாநாயகரின் அனுமதியை பெறவில்லை என்பதை தவிர மற்றபடி ஒரே முகாந்திரத்தின் அடிப்படையில் தான் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் அனுமதி பெற வேண்டுமா என்ற கேள்வியை தனியாக முடிவு செய்ய முடியாது; உரிமை மீறல் பிரச்னையோடு சேர்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.கடந்த 2017 ஆகஸ்டில் பிறப்பித்த நோட்டீஸ் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என ஏற்கனவே முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. இதிலும் தீர்வு காணப்பட வேண்டும்.இதில் முடிவு ஏற்படும் வரை நோட்டீஸ் தொடர்பான நடவடிக்கைகளை மனுதாரர்களுக்கு எதிராக எடுக்க அனுமதிக்க முடியாது. வழக்கில் ஆரம்ப முகாந்திரம் இருப்பதால் மறு உத்தரவு வரும் வரை உரிமை குழுவின் நோட்டீசுக்கு தடை விதிக்கப்படுகிறது.

குறுகிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்வதாக அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார். அதை பதிவு செய்கிறேன். விசாரணை அக். 28க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ''முதல் வழக்கில் சபாநாயகர் சார்பில் யாரும் நோட்டீஸ் பெறவில்லை. அதனால் யார் சார்பில் பதில் அளிக்க அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ் பெறுகிறார் என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்'' என்றார்.இதையடுத்து சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்புவதாகவும் சட்டசபை செயலர் உரிமை குழு மற்றும் அதன் தலைவர் சார்பில் அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ் பெற்றுக் கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை