ஆர்சிபி அணிக்கு 207 ரன் இலக்கு: சதம் விளாசினார் கே.எல்.ராகுல்

தினகரன்  தினகரன்
ஆர்சிபி அணிக்கு 207 ரன் இலக்கு: சதம் விளாசினார் கே.எல்.ராகுல்

துபாய்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 207 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார்.துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆர்சிபி கேப்டன் விராத் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார். கிங்ஸ் லெவன் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 57 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.மயாங்க் 26 ரன் எடுத்து (20 பந்து, 4 பவுண்டரி) சாஹல் சுழலில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் ஒரு முனையில் பொறுமையாக விளையாடி ரன் சேர்க்க, 36 பந்தில் அரை சதம் கடந்த ராகுல் தனது அதிரடியைத் தொடர்ந்தார். இதனால் பஞ்சாப் அணி ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ராகுல் - பூரன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தது. பூரன் 17 ரன், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன் எடுத்து ஷிவம் துபே பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பஞ்சாப் அணி 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில், ராகுலுடன் கருண் நாயர் இணைந்தார். ஸ்டெயின் வீசிய 19வது ஒவரின் முதல் பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் விளாசிய ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். 3வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத ராகுல், அடுத்த 3 பந்துகளில் 6, 6, 4 என விளாச, பஞ்சாப் அணிக்கு 19வது ஓவரில் மட்டும் 26 ரன் கிடைத்தது. ஷிவம் துபே வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளையும் 4, 6, 6 என ராகுல் பறக்கவிட... கிங்ஸ் லெவன் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் துரத்தலை தொடங்கினர். படிக்கல் 1 ரன் மட்டுமே எடுத்து காட்ரெல் வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஜோஷ் பிலிப் 0, கேப்டன் கோஹ்லி 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

மூலக்கதை