தொடர்ந்து 6 நாட்களில் பங்குச்சந்தையில் ரூ.11.31 லட்சம் கோடி இழப்பு

தினகரன்  தினகரன்
தொடர்ந்து 6 நாட்களில் பங்குச்சந்தையில் ரூ.11.31 லட்சம் கோடி இழப்பு

மும்பை: பங்குச்சந்தை 6வது நாளாக நேற்றும் கடும் சரிவை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் நேற்று ஒரே நாளில் ரூ.3.95 லட்சம் கோடியும், தொடர்ந்து 6 நாட்களில் ரூ.11.31 லட்சம் கோடியும் இழந்தனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நேற்று 37,282.18 புள்ளிகளில் தொடங்கியது. அதிகபட்சமாக 36,495.98 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக முடிவில் 1114.82 புள்ளிகள் சரிந்து 36,553.60 ஆக இருந்தது. உலோக, தொழில் நுட்பத்துறை மற்றும் வங்கி பங்குகள் கடும் இழப்பை சந்தித்தன. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 326.3 புள்ளிகள் சரிந்து 10,805.55 ஆக இருந்தது. இதனால், பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் ரூ.3,95,418.32 கோடி சரிந்து, ரூ.1,48,76,217.22 கோடி ஆனது. தொடர்ந்து 6 நாட்களில் ரூ.11,31,815.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இங்கிலாந்து, கனடா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. இந்தியாவிலும், கொரோனா பரவல் அதிகரிப்பால் பொருளாதார மீட்சிக்கான சாதக அம்சங்கள் தென்படாததால் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்று வருகின்றனர்.

மூலக்கதை