பஞ்சாப் ‘சிங்கம்’ ராகுல் சதம்: கோஹ்லி அணி திணறல் | செப்டம்பர் 24, 2020

தினமலர்  தினமலர்
பஞ்சாப் ‘சிங்கம்’ ராகுல் சதம்: கோஹ்லி அணி திணறல் | செப்டம்பர் 24, 2020

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் சதம் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் குவித்தது.

 

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. நேற்று, துபாயில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ஜோர்டான், கவுதம் நீக்கப்பட்டு ஜிம்மி நீஷாம், முருகன் அஷ்வின் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

லோகேஷ் விளாசல்: பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்த போது யுவேந்திர சகால் ‘சுழலில்’ அகர்வால் (26) போல்டானார். உமேஷ் யாதவ் வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல், 36 பந்தில் 50 ரன்களை எட்டினார். ஷிவம் துபே பந்தில் நிகோலஸ் பூரன் (17), மேக்ஸ்வெல் (5) அவுட்டாகினர்.

 

ஸ்டைன் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல், ஐ.பி.எல்., அரங்கில் தனது 2வது சதமடித்தார். தவிர இது, இந்த சீசனில் முதல் சதமானது. தொடர்ந்து அசத்திய இவர், துபே வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட்டார்.

 

பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. ராகுல் (132), கருண் நாயர் (15) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஷிவம் துபே 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பஞ்சாப், பெங்களூரு அணி வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர்.

 

லோகேஷ் ராகுல், 83, 89 ரன் எடுத்திருந்த போது கொடுத்த இரண்டு ‘கேட்ச்’ வாய்ப்புகளை கோஹ்லி நழுவவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட ராகுல், சதம் விளாசினார்.

மூலக்கதை