அரசியல் செய்ய அனுமதியுங்கள்: மெஹபூபா முப்தி மகள் வழக்கு

தினமலர்  தினமலர்
அரசியல் செய்ய அனுமதியுங்கள்: மெஹபூபா முப்தி மகள் வழக்கு

புதுடில்லி: 'அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவிடாமல் தடுக்கிறார்கள்' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தியின் மகள், இல்திஜா முப்தி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு, ஆக., 5ல் நீக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள், முன்னாள் முதல்வர் களான, மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த பரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

வழக்கு


அவர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. பரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், மெஹபூபா மீதான வழக்கு தொடர்கிறது. அதனால் அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருடைய மகள் இல்திஜா முப்தி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது: மெஹபூபா முப்தியை ஆஜர்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு வழக்கைத் தொடர்ந்தோம். அதைத் தொடர்ந்து, அவரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.தற்போது அதில் சில திருத்தங்கள் செய்ய, அனுமதிக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் காவல் பலமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதை எதிர்க்கும் வகையில், மனுவை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.மெஹபூபா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்ந்தது தொடர்பாக பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம், இந்தாண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டது.

ஆனால், ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஓராண்டுஇதில் இருந்தே, நீதிமன்றத்தை அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கின்றனர் என்பது தெரிய வருகிறது. மெஹபூபா முப்தி, ஜம்மு - காஷ்மீரின் முதல்வராக இருந்துள்ளார். மேலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து காவலில் வைத்து உள்ளனர்.

ஒரு முக்கியமான எதிர்க் கட்சித் தலைவரை, விசாரணை ஏதும் இல்லாமல், ஓராண்டுக்கு மேலாக அடைத்து வைத்துள்ளனர். அவர் ஜனநாயகக் கடமையை, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை