விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையத்தை ‘லைட்டா’ நகர்த்திய விஞ்ஞானிகள்: 1.5 கி.மீ. தூர வித்தியாசத்தில் கடந்து சென்றது

தினகரன்  தினகரன்
விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையத்தை ‘லைட்டா’ நகர்த்திய விஞ்ஞானிகள்: 1.5 கி.மீ. தூர வித்தியாசத்தில் கடந்து சென்றது

வாஷிங்டன்: விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்க, சர்வதேச விண்வெளி நிலையம் அதன் சுற்றுப்பாதையில் இருந்து சிறிது நகர்த்தப்பட்டதால் தப்பியது. விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் கைவிடப்பட்டு, அவை கழிவுகளாக அங்கு வலம் வந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் இவை, பயன்பாட்டில் உள்ள செயற்கைக்கோள் மீது மோதி சேதப்படுத்தும் ஆபத்து ஏற்படுகிறது. பழைய செயலிழந்த, கைவிடப்பட்ட செயற்கைக் கோள்கள், அவற்றிலிருந்து கழன்ற பாகங்கள் அனைத்தும் விண்வெளிக் கழிவுகளாகும். இவை அனைத்தும் அதி வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. தற்போது 19,000 பொருட்கள் விண்வெளிக் கழிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் மீது இந்த கழிவுகள் மோதக் கூடிய ஆபத்தான சூழ்நிலை சமீபத்தில் ஏற்பட்டது. இந்த நிலையத்தில்  தற்போது ஆய்வுகள் மேற்கொண்டுள்ள இரண்டு ரஷ்யா, ஒரு அமெரிக்க விஞ்ஞானிகளின் முயற்சியால், இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இவர்களின் இரண்டரை நிமிட கூட்டு முயற்சியால், விண்வெளி நிலையம் அதன் சுற்றுப்பாதையில் இருந்து சிறிது நகர்த்தப்பட்டது. இதனால், விண்வெளி நிலையத்தின் மீது மோதாமல், அதன் சுற்றுப்பாதையில் இருந்து 1.5 கி.மீ தொலைவில்  விண்வெளி கழிவுகள் கடந்து சென்றன. இது குறித்து நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது டிவிட்டர் பதிவில், `சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் விண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முடியாத பட்சத்தில், அதில் இருந்து வெளியேறவும் அவர்கள் தயாராக இருந்தனர். இந்த கழிவுகள் 2018ம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய ராக்கெட்டின் உடைந்த பாகங்களாகும். இது கடந்தாண்டு 77 பாகங்களாக அது உடைந்தது,’ என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே 25 முறை* சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 420 கி.மீ. தொலைவில் புவியின் வட்டப்பாதையில் மணிக்கு 17,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது. * இந்த வேகத்தில், சிறிய பொருள் ஏதாவது பட்டால் கூட விண்கலத்தின் சோலார் பேனல் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் உடைந்து விடக் கூடும்.* கடந்த 1999 முதல் 2018ம் ஆண்டு வரையில், இதுவரை 25 முறை இத்தகைய மோதல் தவிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

மூலக்கதை