ஐநாவில் காஷ்மீர் பற்றி சர்ச்சை துருக்கி அதிபர் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்: ‘வேலையை பார்’ என காட்டம்

தினகரன்  தினகரன்
ஐநாவில் காஷ்மீர் பற்றி சர்ச்சை துருக்கி அதிபர் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்: ‘வேலையை பார்’ என காட்டம்

ஜெனீவா: `ஐநா பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் பேசியது முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல’ என்று இந்தியா கண்டித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகளின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பொதுச்சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உரை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, மாநாட்டில் வெளியிடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் உரையும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை, துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகனின் பேச்சு வெளியிடப்பட்டது. அதில் பேசிய எர்டோகன், ``தெற்காசியாவின் அமைதிக்கு முக்கிய காரணியாக இருக்கும் காஷ்மீர் பிரச்னை, தற்போதும் முக்கிய பிரச்னையாக மாறி உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த பிரச்னை மிகவும் சிக்கலாகி விட்டது. ஐநா தீர்மானங்களுக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார். இதற்கு இந்தியாவுக்கான ஐநா.வின் நிரந்தர தூதர் திருமூர்த்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்தார். `இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் துருக்கி தலையிடுவது, முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்க, துருக்கி கற்று கொள்ள வேண்டும். துருக்கி முதலில் தனது நாட்டின் கொள்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது,’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மூலக்கதை