இந்திய பொருளாதாரத்தில் சுணக்கம் ஐ.நா., அறிக்கையில் தகவல்

தினமலர்  தினமலர்
இந்திய பொருளாதாரத்தில் சுணக்கம் ஐ.நா., அறிக்கையில் தகவல்

நியூயார்க்:'கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, இந்திய பொருளாதாரத்தில், நடப்பு ஆண்டில், 5.9 சதவீதம் சுணக்கம் ஏற்படும்' என, ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை குறித்து, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான, ஐ.நா., அமைப்பு, அறிக்கை ஒன்றை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.அதன் விபரம்:நடப்பு ஆண்டின், சர்வதேச பொருளாதாரத்தில், 4.3 சதவீத சுணக்கம் ஏற்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள், 450 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்காசியாவில், நடப்பு ஆண்டில், 4.8 சதவீத பொருளாதார சுணக்கம் ஏற்படும். அடுத்த ஆண்டில், 3.9 சதவீதமாக மீட்டெடுக்கப்படும்.இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, நடப்பு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.9 சதவீத சரிவு உண்டாகும். அது, அடுத்த ஆண்டில், 3.9 சதவீதமாக மீட்டெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பாண்டில், 5.4 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என, தெரிகிறது.உலக அளவில், அனைத்து நாடுகளும், நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில், சீன பொருளாதாரத்தில், 1.3 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்றும், இது அடுத்த ஆண்டில், 8.1 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நெருக்கடி நிலையில் இருந்து, அனைத்து நாடுகளும், அடுத்த ஆண்டில் மீள துவங்கினாலும், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நிறுவனங்களின் கடன் சுமை அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

உலகம் முழுதும், 12 கோடிக்கும் அதிகமானோர், கடும் வறுமையில் தள்ளப்படவும், 30 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, உணவு பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்படக்கூடும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

துருக்கிக்கு இந்தியா பதிலடி

மேற்காசிய நாடான, துருக்கி அதிபர் எர்டோகன், ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, 'தெற்காசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரச்னையை, ஐ.நா.,வின் தீர்மானத்தின்படியும், காஷ்மீர் மக்களின் விருப்பப்படியும், பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும்' என்றார்.

இது குறித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, தன், 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:காஷ்மீர் விவகாரம் குறித்து, துருக்கி அதிபர் கூறியிருக்கும் கருத்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. மற்ற நாடுகளின் இறையாண்மையையும், கொள்கையையும் மதித்து நடக்க, துருக்கி கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை