முன்பே முடிந்தது பார்லி.,கூட்டத்தொடர் கடைசி நாளிலும் போராட்டம்

தினமலர்  தினமலர்
முன்பே முடிந்தது பார்லி.,கூட்டத்தொடர் கடைசி நாளிலும் போராட்டம்

கொரோனா அச்சுறுத்தல், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை அடுத்து, பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர், திட்டமிட்ட கால அட்டவணைக்கு, எட்டு நாட்களுக்கு முன்னதாக நிறைவுபெற்று, இரு சபைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.


பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 14 ம் தேதி, துவங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் துவங்கிய இந்த கூட்டத்தொடரில், எம்.பி.,க்கள், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கேற்றனர்.இரு சபைகளின் இருக்கைகளையும் பங்கிட்டுக் கொண்டு, காலையில் ராஜ்யசபாவும் மதியம் லோக்சபாவுமாக, தொடர்ந்து அலுவல்கள் நடைபெற்றன. வார விடுமுறை நாட்களில்கூட, சபை அலுவல்கள், நடைபெற்றன.
இந்நிலையில், எம்.பி.,க்கள் பலருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வண்ணம் இருந்தன. பார்லிமென்ட் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் என பலருக்கும், தினந்தோறும் தொற்று ஏற்பட்டுக் கொண்டிருந்ததால், அச்சம் நிலவியது.

கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அலுவல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ராஜ்யசபாவில், கடந்த ஞாயிறன்று, வேளாண் துறை தொடர்பான மசோதாக்கள், அதிரடியாக நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தொடரின், மிக முக்கிய திருப்பமான, இந்த மசோதா நிறைவேற்றத்தின்போது, ராஜ்யசபாவில், 'மைக்' உடைக்கப்பட்டு, மசோதாவின் நகல்கள் கிழித்தெறியப்பட்டு, அமளி ஏற்படவே, எட்டு எம்.பி.,க்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இந்த நடவடிக்கையை எதிர்த்து, ராஜ்யசபாவில், காங்., உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகளின் எம்.பி.,க்கள், மீதமுள்ள கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்தனர். எதிர்க்கட்சிகளின் இருக்கைகள், மொத்தமாக காலியாகின.இதே பிரச்னையை மையமாக வைத்து, லோக்சபாவிலும், கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால், சபை அலுவல்கள் பாதிப்படைந்தன.இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும், பார்லி வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக, நேற்று காலை திரண்டனர். எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, ஆளும்தரப்பை கண்டித்து, பதாகைகளை கையில் பிடித்திருந்தனர்.

அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி, பார்லி., வளாகத்தின் மற்றொரு இடத்தில் உள்ள அம்பேத்கர் சிலை வரை சென்றனர். கொரோனா தொற்று காரணமாக, பார்லி., வளாகத்தில் கூட்டமாக கூடுவதற்கு, தடை இருந்தும், எம்.பி.,க்களின் இந்த ஊர்வலத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
கொரோனா தொற்று அபாயம் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் சபை புறக்கணிப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, பார்லி., கூட்டத்தொடரை முடிக்க, அரசு தரப்பு முடிவெடுத்தது.

இதையடுத்து, ராஜ்யசபா அலுவல்கள் முடிக்கப்பட்டு, சபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபாவை ஒத்திவைப்பதற்கு முன்னதாக, அதன் தலைவர், வெங்கையா நாயுடு, பேசுகையில், ''சபை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதும், அதை கண்டித்து, மற்ற உறுப்பினர்கள் சபையை புறக்கணிக்கையில், மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதும் முதல்முறை அல்ல. உறுப்பினர்களின் இதுபோன்ற நடவடிக்கைகள், மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள், வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும்,'' என்றார்.இதே போல, மாலை, 6:௦௦ மணிக்கு துவங்கிய லோக்சபா கூட்டத்திலும், அலுவல்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் அக்டோபர் 1 வரை, நடத்தப்பட வேண்டிய மழைக்கால கூட்டத்தொடர், எட்டு அலுவல் நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்கு வந்துள்ளது.

முடிவுக்கு வந்தது உண்ணா விரதம்ராஜ்யசபாவில், வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, பல்வேறு எதிர்கட்சிகளை சேர்ந்த, எட்டு எம்.பி.,க்கள், அமளியில் ஈடுபட்டனர். சபை குறிப்புகளை கிழித்து, அதை, துணை தலைவர் ஹரிவன்ஷ் மீது வீசினர். இதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட, எட்டு எம்.பி.,க்களின் மோசமான நடவடிக்கைகளை கண்டித்து, ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ், நேற்று முன் தினம் முதல், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று மாலை, ஐக்கிய ஜனதா தள எம்.பி., ராஜிவ் ரஞ்சன் சிங் வழங்கிய பழச்சாறை அருந்தி உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.

ஜனாதிபதியிடம் எதிர்கட்சியினர் கோரிக்கைஎதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவுக்கு, ஒப்புதல் அளிக்க கூடாது' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து, காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வேளாண் மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன், விவசாய தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரிடமும், மத்திய அரசு கருத்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், அனைத்து தரப்பினரின் எதிர்ப்பை மீறி, மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது, அரசியலமைப்புக்கு எதிரானது. இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க கூடாது. அதை, அவர் திருப்பி அனுப்ப வேண்டும் என, அவரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -

மூலக்கதை