செய்தி சில வரிகளில்....உலகம்

தினமலர்  தினமலர்
செய்தி சில வரிகளில்....உலகம்

விபத்தில் தப்பியது விண்வெளி மையம்

வாஷிங்டன்: விண்வெளியில் காலாவதியான ராக்கெட்கள், செயற்கைக் கோள்கள் உள்ளிட்ட ஏராளமான உலோகக் கழிவுகள் சுற்றி வருகின்றன. அவற்றுள், ஜப்பான் ராக்கெட்டின் உடைந்த பாகம் ஒன்று, விண்ணில் சுற்றி வரும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நோக்கி, வேகமாக மோத வந்தது. இதை தவிர்க்க, விண்வெளி வீரர்கள், ஆய்வு மையத்தின் சுற்று வட்டப் பாதையை மாற்றினர். இதையடுத்து, ராக்கெட் துண்டு, 1.40 கி.மீ., துாரத்தில் கடந்து சென்றது. மீண்டும் ஆய்வு மையம், பழைய சுற்று வட்டப் பாதைக்கு திரும்பியதாக, 'நாசா' தெரிவித்துள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் 'டிஸ்சார்ஜ்

'பெர்லின்: விஷம் கலந்து வைத்த காபி குடித்ததால் பாதிக்கப்பட்ட, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர், அலெக்ஸி நவல்னி, ஜெர்மனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 'கோமா' நிலைக்கு சென்ற அவர், கடும் போராட்டத்துக்கு பின் குணமடைந்தார். 32 நாட்கள் சிகிச்சைக்குப் பின், மருத்துவமனை நிர்வாகம், அவரை 'டிஸ்சார்ஜ்' செய்தது. விரைவில் அவர் முழுமையாக குணமடைவார் என, டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பாக்., வம்சாவளி கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும், பாக்., வம்சாவளியைச் சேர்ந்த, ஒபய்துல்லா சையது என்ற தொழிலதிபர், அதி நவீன தொழில்நுட்பத்திலான கம்ப்யூட்டர் சாதனங்கள், சாப்ட்வேர்கள் ஆகியவற்றை, பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளார். அவர், அமெரிக்க அரசு அனுமதியின்றி, பாக்., அணுசக்தி ஆணையத்திற்கு ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்திற்கு அதிகப்பட்சம், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளது.

அமெரிக்காவை விஞ்ச முடியாத சீனா

பீஜிங்: உலகிலேயே, ஆறாம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இத்தகைய விமானங்களை தயாரிக்க, சீனாவும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், அமெரிக்க போர் விமானத்தின் வடிவமைப்பு, தயாரிப்பு ஆகியவற்றின் படி சீனா போர் விமானங்களை உருவாக்க, இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என, ஹாங்காங்கில் இருந்து வெளிவரும், 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் ஆட்சி அமைக்க அன்வர் திட்டம்

கோலாலம்பூர்: மலேசிய எதிர்க்கட்சி தலைவர், அன்வர் இப்ரஹிம், பார்லி.,யில் போதிய பெரும்பான்மை உள்ளதால், விரைவில் புதிய அரசு அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக, மன்னரை சந்திக்க இருந்த நிலையில், அவர் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதால் சந்திப்பு நடைபெறவில்லை என, அன்வர் தெரிவித்துள்ளார். மன்னர் குணமடைந்து வந்ததும், தன் தலைமையில் நிலையான புதிய அரசு அமையும் என, அன்வர் தெரிவித்துள்ளார்.

'பேஸ்புக்' தளத்தில் சீனா சில்மிஷம்

வாஷிங்டன்: 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அமெரிக்க அரசியலில் தலையிடும் விதத்தில், சில கருத்துக்கள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து, வெளியான இந்த கருத்துக்கள் அடங்கிய பக்கங்களை, பேஸ்புக் நிர்வாகம் நீக்கியுள்ளது. அவை, அமெரிக்கா மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் அரசியலில் தலையிடும் விதத்தில் இருந்ததாக, பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது.

ஆஸி.,யில் 500 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவில், டாஸ்மானியா தீவருகே, சில தினங்களுக்கு முன், 270 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றை மீண்டும் கடலில் விடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஸ்ட்ர ஹன் நகரின் தெற்கே, 10 கி.மீ., தொலைவில் மேலும், 200க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. ஆழ்கடலில் விடப்படும் திமிங்கலங்களில் சில, மீண்டும் கரை ஒதுங்குவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை, 50 திமிங்கலங்கள் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், 300க்கு மேற்பட்டவை பரிதாபமாக இறந்தன.

நர்சை கொன்றவருக்கு மரண தண்டனை

டெர்ரி ஹாட்: அமெரிக்காவின், இன்டியானா மாகாணம், டெர்ரி ஹாட் நகரில் உள்ள சிறையில், வில்லியம் எம்மட் லிக்ராய், 50 என்ற முன்னாள் ராணுவ வீரருக்கு, விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர், தனது குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர் என கருதி, ஒரு நர்சை பாலியல் கொடுமை செய்து, கொலை செய்துள்ளார். அதன் பின், கொல்லப்பட்டவர் அப்பாவி என, தெரியவந்ததும், தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார், எம்மட் லிக்ராய்.
நிலவில் நிலம் வாங்கிய கணவர்

ராவல்பிண்டி: பாகிஸ்தானைச் சேர்ந்த, சோஹப் அகமது என்பவர், தன் புது மனைவிக்கு, நிலவில் வாங்கியுள்ள 1 ஏக்கர் நிலத்தை, திருமணப் பரிசாக அளித்துள்ளார். இதற்கான நில ஆவணங்களை, அமெரிக்காவின், சர்வதேச நிலவு நிலங்கள் பதிவாளர் அலுவலகம், வழங்கியுள்ளது. சமீபத்தில் மறைந்த, நடிகர், சுஷாந்த் சிங் ராஜ்புட், ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், டாம் குரூஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களும், நிலவில் இடம் வாங்கி போட்டுள்ளனர். பீஹாரைச் சேர்ந்த தொழிலதிபர், நீரஜ் குமார், நிலவில், ஒரு ஏக்கர் நிலத்தை, 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இயேசு அவதாரத்தில் அலைந்தவர் கைது

மாஸ்கோ: சைபீரியாவைச் சேர்ந்த, செர்ஜி டோரப், 59, என்ற முன்னாள் போலீஸ்காரர், திடீரென தன்னை இயேசுவின் மறு அவதாரம் என கூறி, குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தார். கிறிஸ்துவர்களின், 'பைபிள்' மறை நுாலுக்கு இரண்டாம் பாகம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இவர் தன் சீடர்களிடம் ஏராளமாக பணம் வசூலிப்பதாகவும், உடல் ரீதியாக தொல்லைகள் தருவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, செர்ஜி டோரப், அவரது நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

20 ஆண்டுக்கு பின் திரும்பும் தமிழர்

துபாய்: தமிழகத்தைச் சேர்ந்த, தனவேல் மதியழகன் என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு ஏஜென்ட் மூலம், அபுதாபியில் வேலை பார்க்கச் சென்றுள்ளார். அந்த ஏஜென்ட், தனவேலின் பாஸ்போர்ட்டுடன் தலைமறைவாகி விட்டார். இதனால், சட்ட விரோதமாக தங்கி வேலை பார்த்த குற்றச்சாட்டில், தனவேலுக்கு, 2.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை செலுத்தினால் தான் அவர் தமிழகம் வர முடியும் என்ற நிலையில், இந்திய துாதரகத்தின் முயற்சியில், அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்குப் பின், தனவேல் மதியழகன், தன் குடும்பத்தை காண, தமிழகம் வர உள்ளார்.


மூலக்கதை