ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்

தினமலர்  தினமலர்
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்

நியூயார்க்:கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில், பலியானோர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியது.

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் துவங்கிய, தொற்று பரவல், உலகெங்கும் விரிவடைந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகெங்கும், 3.1 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 9.62 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் வெகுவாக குறைந்த நிலையில், நடைமுறையில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.

அதே நேரத்தில், அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ம் தேதி நடக்க உள்ள நிலையில், அமெரிக்காவில், வைரசால் பலியானோர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.'இந்த சீன வைரஸ், உலகெங்கும் பரவியுள்ளதற்கு, சீனாவை பொறுப்பாக்க வேண்டும்' என, ஐ.நா., சபை கூட்டத்தில் பேசிய, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், உலகெங்கும், 20 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.இந்த நிலையில், பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால், பல ஐரோப்பிய நாடுகளில், கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.

குறிப்பாக, பிரிட்டனில், பல்வேறு கட்டுப்பாடுகளை, பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார். வீடுகளில் இருந்தே வேலை பார்ப்பது, விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு தடை, கேளிக்கை விடுதிகள் மூடல் என, பல கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.

இதேபோல் ஸ்பெயின், நார்வே, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில், முஸ்லிம்கள் மேற்கொள்ளும் உம்ரா யாத்திரியை, அக்., 4 முதல் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை