எழுச்சி பெறுமா பஞ்சாப்: பெங்களூரு அணியுடன் மோதல் | செப்டம்பர் 23, 2020

தினமலர்  தினமலர்
எழுச்சி பெறுமா பஞ்சாப்: பெங்களூரு அணியுடன் மோதல் | செப்டம்பர் 23, 2020

துபாய்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, லோகேஷ் ராகுல் வழிநடத்தும் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.

ஐதராபாத் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய உற்சாகத்தில் உள்ளது பெங்களூரு. அரைசதம் கடந்த தேவ்தத் படிக்கல், டிவிலியர்ஸ் மீண்டும் சாதிக்கலாம். ஆரோன் பின்ச், கேப்டன் விராத் கோஹ்லி ரன் மழை பொழிய வேண்டும். காயத்தால் ‘ஆல்–ரவுண்டர்’ கிறிஸ் மோரிஸ் மீண்டும் பங்கேற்கமாட்டார்.

‘வேகத்தில்’ நவ்தீப் சைனி ஆறுதல் தருகிறார். அதிக ரன்கள் வழங்கிய உமேஷ் யாதவ், ஸ்டைன் நீக்கப்பட்டு முகமது சிராஜ், மொயீன் அலி தேர்வாகலாம். ‘சுழலில்’ யுவேந்திர சகால் மீண்டும் அசத்தலாம்.

கெய்ல் வாய்ப்பு: டில்லி அணிக்கு எதிராக ‘சூப்பர் ஓவரில்’ தோல்வியடைந்த சோகத்தில் உள்ளது பஞ்சாப் அணி. அம்பயர் தவறு காரணமாக வெற்றியை பறிகொடுத்த இந்த அணிக்கு 89 ரன் விளாசிய மயங்க் அகர்வால், மீண்டும் அசத்தலாம். பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், கருண் நாயர், நிகோலஸ் பூரன், மேக்ஸ்வெல் எழுச்சி பெற வேண்டும். பேட்டிங் வரிசையை பலப்படுத்த கிறிஸ் கெய்ல், ஜிம்மி நீஷம் தேர்வாகலாம்.

‘வேகத்தில்’ முகமது ஷமி, காட்ரெல், ‘சுழலில்’ ரவி பிஷ்னாய் மீண்டும் ஜொலிக்கலாம்.

 

ஐ.பி.எல்., அரங்கில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் 24 முறை மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 12ல் வெற்றி பெற்றன.

மூலக்கதை