கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து

ஷார்ஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், இரண்டு வார கால தனிமைப்படுத்தலில் இருந்ததால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என்று, அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் 4வது லீக் போட்டி ஷார்ஜாவில் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.   சென்னை அணியில் அம்பத்தி ராயுடுவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் ேதானி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், புதுமுக வீரர் ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.இருவரும் சென்னை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இந்த கூட்டணியை உடைக்க சென்னை கேப்டன் தோனி ரொம்ப சிரமப்பட்டார்.

அணியின் ஸ்கோர் 132 ரன்களாக (11. 4 ஓவர்) உயர்ந்த போது சஞ்சு சாம்சன் 74 ரன்களில் கேட்ச் ஆனார். 19வது ஓவரில் கேப்டன் ஸ்டீவன் சுமித் 69 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

நிகிடி வீசிய கடைசி ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் தொடர்ச்சியாக 4 சிக்சர் விளாசினார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது.

அடுத்து 217 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. பவர்-பிளே வரை தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 33 ரன்னிலும், முரளிவிஜய் 21 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

தொடர்ந்து தடுமாற்றத்துடன் ஆடிய கேப்டன் தோனி, டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல் அளித்தார்.

20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 200 ரன்களே சேர்க்க முடிந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இதுகுறித்து, கேப்டன் தோனி கூறுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், இரண்டு வார கால தனிமைப்படுத்துதலில் இருந்ததால், அணிக்கு தேவையான பயிற்சி வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் வீரர்களுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை.
எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதில் தவறு செய்தனர்.

நாங்கள் அவர்களை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால், அது நல்ல விளையாட்டாக இருந்திருக்கும்’ என்றார்.

.

மூலக்கதை