தற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை

லண்டன்: தற்போது ஆராய்ச்சி நிலைகளில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள், பயனளிக்கும் என எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் ஆதநாம் கூறியுள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால், உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9 லட்சத்து 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் 56 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தரக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் உலகம் முழுவதும் முன்னேறிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளோம் என ரஷ்யா அறிவித்துள்ளது.

இதனால் அந்த மருந்துக்கு உலகம் முழுவதும் இருந்து ஆர்டர்கள் குவிந்துள்ளன.

இந்தியாவின் மருந்து நிறுவனம் ஒன்றும், 10 கோடி டோஸ் தடுப்பு மருந்துக்கு ரஷ்யாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளது. ஐநா உறுப்பினர்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்து வழங்கத் தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வேக்சின் (தடுப்பு மருந்து) இன்னும் ஆராய்ச்சி நிலைகளில்தான் உள்ளன என்றும், தற்போது ஆராய்ச்சி நிலைகளில் உள்ள மருந்துகள் பலன் அளிக்கும்  என்தற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் ஆதநாம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: பக்க விளைவுகளை குறைத்து, மேலும் மேலும் சக்தி வாய்ந்தவைகளாக கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் முன்னேறிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

மேலும் மேலும் மனித பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

200க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி நிலைகளில் உள்ளன.

ஆனாலும் தற்போதுள்ள நிலையில் இந்த மருந்துகள் பயன் தரும் என எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. முந்தைய ஆராய்ச்சிகளை ஒப்பிடுகையில் ஒன்றைத்தான் கூற முடியும்.

சில மருந்துகள் தவறியிருக்கின்றன. சில மருந்துகள் பயனளித்திருக்கின்றன.

கொரோனாவுக்கு திறனுள்ள மருந்துகளை கண்டுபிடிக்கும் போட்டி, வளர்ந்த நாடுகளிடையே உள்ளது. இந்த நோயை குணப்படுத்தும் 51 சதவீத அளவிலான திறனுள்ள மருந்துகள், பணக்கார நாடுகளிடம் இருந்து உலக மக்கள்தொகையில் 13 சதவீதம் பேருக்கு கிடைத்துள்ளன.

முன்னதாக ஜி20 நாடுகளின் சுகாதார மற்றும் பொருளாதார அமைச்சர்கள், இந்த தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் ‘5 பணக்கார நாடுகள் மட்டுமே கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளின் இறுதி நிலைகளில் உள்ளன.மற்ற நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களிடம், கொரோனா தடுப்பு மருந்தை கண்டறியும் திறன் போதிய அளவில் இல்லை’என உலக அளவிலான ஒரு தன்னார்வல அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்துகள் தயார் என்று ஒவ்வொரு நாடும் அறிவித்து வந்த நிலையில், விரைவில் தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வரும், எல்லோரும் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைத்துத்தான் தற்போது ஊரடங்கு தளர்வுகளில் பல்வேறு பணிகளையும் தொடங்கியுள்ளனர்.

ஆனால் உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை