விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

தினமலர்  தினமலர்
விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

புதுடில்லி:மத்திய அரசு கொண்டு வந்த, விவசாய மசோதா குறித்து, நாடு முழுதும், ஆதரவும், - எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் பதிவு ஒன்று, பல்வேறு தரப்பிலும், கவனம் ஈர்த்து வருகிறது.

விவசாய மசோதாவுக்கு ஆதரவாக, ரிஷி பாக்ரீ என்பவர், பகிர்ந்துள்ள தன் நண்பரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சியின் போது, பொருளாதார சந்தை உலகமயமாக்கப்பட்டது. அதற்கு, பல்வேறு உள்நாட்டு நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'கிழக்கு இந்திய கம்பெனியை போல, நம்மை மீண்டும் அடிமைகளாக்கிவிடுவர்' என, குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அடுத்த தேர்தலில், நரசிம்ம ராவ் தோல்வி அடைந்தார். ஆனால், அன்றைக்கு அவர் எடுத்த முடிவால், உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா இடம் பிடித்துள்ளது.கணினி வந்தபோதும், அதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தன. இன்றைக்கு, மென்பொருள் உற்பத்தியில், நாம் முன்னணி வகிக்கிறோம்.

நாம் சுதந்திரம் பெற்று, 74 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இதன் வாயிலாக, இடைத்தரகர்கள் பிடியில் இருந்து, விவசாயிகள் விடுதலை பெற்றுள்ளனர்.புதிய மசோதாவில், குறைந்தபட்ச ஆதரவு விலை விலக்கிக் கொள்ளப்படும் என, சிலர் அச்சப்படுகின்றனர். ஆனால், விவசாயிகள், தங்கள் விலை பொருட்களுக்கு, அதிக லாபம் ஈட்டும் நிலை வரும் போது, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, தேவையில்லாததாகி விடும்.

பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், விவசாயிகள் வரவேண்டிய நிலை உருவாகும் என்பதிலும் உண்மையில்லை. 'போர்டு, ஹோண்டா, கே.எப்.சி.,' போன்ற நிறுவனங்கள், இங்கு வந்தபோதும், இப்படி தான் சொல்லப்பட்டன. ஆனால், இன்றைக்கும், 'மாருதி' நிறுவனம், 51 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனத்துக்கு, வெறும், 3 சதவீத சந்தை மதிப்பே உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சமூக வலைதள பதிவை, பல்வேறு தரப்பினரும், பகிர்ந்து வருகின்றனர்.

மூலக்கதை