காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்

தினமலர்  தினமலர்
காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு: துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்

நியூயார்க்: ஐ.நா., கூட்டத்தில் காஷ்மீர் குறித்து பேசிய துருக்கி அதிபருக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.


இரண்டு நாட்கள் நடக்கும் ஐ.நா., கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் கூறியதாவது: தெற்கு ஆசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு காஷ்மீர் விவகாரம் முக்கியமானதாகும். இந்த பிரச்னையை ஐ.நா.,வின் தீர்மானத்தின்படியும், காஷ்மீர் மக்களின் விருப்பப்படியும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


ஐ.நா.,வுக்கான இந்தியாவின் பிரதிநிதி திருமூர்த்தி, டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி அதிபரின் கருத்தை நாங்கள் பார்த்தோம். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும். அதனை ஏற்று கொள்ள முடியாது. மற்ற நாடுகளின் இறையாண்மையையும் கொள்கையையும் மதித்து நடக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானின் கூட்டாளியான துருக்கி, சர்வதேச அமைப்புகளில் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பி வருகிறது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த வாரம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிலும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.

மூலக்கதை