முத்திரை பதிக்குமா மும்பை: கோல்கட்டா அணியுடன் மோதல் | செப்டம்பர் 22, 2020

தினமலர்  தினமலர்
முத்திரை பதிக்குமா மும்பை: கோல்கட்டா அணியுடன் மோதல் | செப்டம்பர் 22, 2020

அபுதாபி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று, அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, தினேஷ் கார்த்திக் வழிநடத்தும் கோல்கட்டா அணியை சந்திக்கிறது.

 

சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த சோகத்தில் உள்ள மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுக்க வேண்டும். குயின்டன் டி காக், சவுரப் திவாரி மீண்டும் கைகொடுக்கலாம். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, போலார்டு ரன் மழை பொழிந்தால் நல்லது. ‘பேட்டிங்’ வரிசையை பலம் சேர்க்க இஷான் கிஷான் தேர்வு செய்யப்படலாம்.

வேகப்பந்துவீச்சில் பும்ரா எழுச்சி பெற வேண்டும். டிரன்ட் பவுல்ட் அல்லது பட்டின்சன் நீக்கப்பட்டு ‘ஆல்–ரவுண்டர்’ நாதன் கூல்டர்–நைல் தேர்வாகலாம். ‘சுழலில்’ குர்னால் பாண்ட்யா, ராகுல் சகார் சோபிக்க வேண்டும். ஹர்திக், போலார்டு ஆகியோரை கூடுதல் பவுலர்களாக பயன்படுத்தலாம்.

 

மார்கன் நம்பிக்கை: இரண்டு முறை (2012, 2014) கோப்பை வென்ற கோல்கட்டா அணி, கடந்த சீசனில் 5வது இடம் பிடித்தது. ‘பேட்டிங்கில்’ சுப்மன் கில், ஆன்ட்ரி ரசல், கேப்டன் தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், டாம் பான்டன், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் சாதிக்கலாம். வேகப்பந்துவீச்சில் ‘காஸ்ட்லீ’ வீரர் கம்மின்ஸ் கலக்கலாம். ‘சுழலில்’ சுனில் நரைன், குல்தீப் யாதவ் இருப்பது பலம்.

 

ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா, மும்பை அணிகள் 25 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 19, கோல்கட்டா 6ல் வென்றன.

மூலக்கதை