இந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென் ஆப்ரிக்கா

தினமலர்  தினமலர்
இந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென் ஆப்ரிக்கா

பிரிட்டோரியா : தென் ஆப்பிரிக்கா அக்., 1 முதல் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளது. அத்துடன் கொரோனா தொற்று காரணமாக, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தென் ஆப்ரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தலால், இந்திய பயணிகள்தென் ஆப்பிரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என அரசு வட்டாரம் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் நோய் தொற்றை குறைக்க ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அக்., 1 முதல் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்கவும் தயாராக உள்ளது.


எனினும், BRICS கூட்டமைப்பின் இணைப்பு நாடுகளான இந்தியா மற்றும் பிரேசிலில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தென் ஆப்பிரிக்கா குழப்பத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்த படியாக, இந்தியா மற்றும் பிரேசிலில் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. ஆனால் இந்த 2 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிப்பது, தென் ஆப்பிரிக்காவை பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக்கலாம் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.


இந்தியா மற்றும் பிரேசிலுடன் வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்வதா அல்லது தூதாண்மை தொடர்பான பிரச்னைக்கான அபாயத்தை எதிர்கொண்டு, இந்நாடுகளுக்கு தடையை விதிப்பதா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அந்நாட்டின் சுகாதாரதுறை அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ், இது தொடர்பாக பல்வேறு அரசாங்க அமைச்சகங்களுடன் கலந்தாலோசனை செய்து, தென்னாப்பிரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படக் கூடிய நாடுகளின் பட்டியலைத் தொகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வார தொடக்கத்தில் இந்த பட்டியல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவை தவிர பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்த தடை பட்டியலில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மூலக்கதை